சிங்கப்பூர் பொருளியல் 2024 நாலாம் காலாண்டில் 4.3 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததாக வர்த்தக, தொழில் அமைச்சு வியாழக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்துள்ளது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில், நாலாம் காலாண்டின் வளர்ச்சி 3.8 விழுக்காடு இருக்கும் என்று புளூம்பெர்க் ஆய்வில் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்து இருந்ததைக் காட்டிலும் அதிக வளர்ச்சி பதிவாகி உள்ளதாக அது தனது முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சேவைத் துறைகளும் கட்டுமானத் துறையும் அந்த வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தன.
இருப்பினும், இந்த வளர்ச்சி மதிப்பீடு இதற்கு முந்திய காலாண்டின் 5.4 விழுக்காட்டைக் காட்டிலும் குறைவு.
அதேநேரம், காலாண்டு அடிப்படையில் பருவத்திற்கேற்ப சரிக்கட்டப்படும் விகிதத்தில் பார்த்தால் 0.1 விழுக்காடு வளர்ச்சி அதிகரித்துள்ளது.
2024 ஆண்டு முழுமைக்குமான பொருளியல் வளர்ச்சி 4 விழுக்காடு என அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் லாரன்ஸ் வோங் டிசம்பர் 31ஆம் தேதி தமது புத்தாண்டு உரையில் குறிப்பிட்டதை அது பிரதிபலிக்கிறது.
2023ஆம் ஆண்டில் பதிவான 1.1 விழுக்காடு வளர்ச்சியைக் காட்டிலும் இது வேகமான வளர்ச்சி.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஈராண்டுகளின் வளர்ச்சி விகிதம் இவ்வாறு இருக்கையில், பிறந்திருக்கும் புதிய ஆண்டின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று கடந்த நவம்பர் மாதம் அமைச்சு ஒரு முன்னுரைப்பை வெளியிட்டிருந்தது.
2025ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 1 விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்பது அந்தக் கணிப்பு.
அதற்கு சில காரணிகளையும் அமைச்சு சுட்டியிருந்தது.
மேலும் மேலும் பெரிதாகி வரும் புவிசார் அரசியல் பூசல், அமெரிக்க அதிபர் பதவியில் அமர இருக்கும் டிரம்ப்பின் பொருளியல் கொள்கைகள் மீது அதிகரித்து வரும் நிச்சயமற்ற நிலை போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
2024 நாலாம் காலாண்டில் மொத்த, சில்லறை வர்த்தகத் துறையும் போக்குவரத்து மற்றும் சரக்கு சேமிப்புத் துறையும் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 5.6 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்தன.
மூன்றாம் காலாண்டில் காணப்பட்ட 5.2 விழுக்காடு வளர்ச்சியை அது முந்தியது.
இயந்திரங்கள் மற்றும் சாதனங்களின் விநியோகம் சிறப்பாக நடைபெற்றது மொத்த வர்த்தகத் துறை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, கட்டுமானத் துறை மூன்றாம் காலாண்டில் பதிவான 4.7 விழுக்காடு வளர்ச்சியை முறியடித்துள்ளது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில், நாலாம் காலாண்டில் அந்தத் துறை 5.9 விழுக்காடு வளர்ந்ததாக அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

