‘இன்கம் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தின் ‘ஹைவ்’ டிஜிட்டல் தளத்தை வாங்குகிறது சிங்கப்பூர் ‘எம்பெடட் பைனான்சியல்’ குழுமம்

‘இன்கம் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தின் ‘ஹைவ்’ டிஜிட்டல் தளத்தை வாங்குகிறது சிங்கப்பூர் ‘எம்பெடட் பைனான்சியல்’ குழுமம்

2 mins read
95e90443-ea4a-4536-883c-ad73ba98ad81
‘இன்கம் இன்சூரன்ஸ்’, தனது ‘ஹைவ்’ மின்னிலக்கக் காப்புறுதித் தளத்தை சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘எம்பெடட் ஃபைனான்சியல் குரூப் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்துக்கு விற்பனை செய்யவுள்ளதாக வியாழக்கிழமையன்று (ஜூன் 18) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. - படம்: இன்கம் இன்சூரன்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ‘இன்கம் இன்சூரன்ஸ்’, தனது ‘ஹைவ்’ மின்னிலக்கக் காப்புறுதித் தளத்தை சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘எம்பெடட் ஃபைனான்சியல் குரூப் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்துக்கு விற்பனை செய்யவுள்ளதாக வியாழக்கிழமையன்று (ஜூன் 18) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இரு நிறுவனங்களின் உத்திபூர்வப் பொருத்தம், வணிக ஒருங்கிணைப்பு மற்றும் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விற்பனை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இதன் விற்பனைத் தொகை எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘இன்கம் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘ஹைவ்’ தொழில்நுட்பத் தளம், காப்புறுதித் தயாரிப்புகளை மிக விரைவாகவும் சந்தா அல்லது பயன்பாட்டுக்கு ஏற்ப பணம் செலுத்தும் நீக்குபோக்குமிக்க முறைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உதவுகிறது.

இந்த விற்பனைக்குப் பிறகு, ‘ஹைவ்’ தளத்தின் 100 விழுக்காடு உரிமையையும் ‘எம்பெடட் ஃபைனான்சியல்’ குழுமம் பெற்றுக்கொள்ளும் அதே வேளையில், ‘இன்கம் இன்சூரன்ஸ்’ தொடர்ந்து அதன் வாடிக்கையாளராக நீடிக்கும்.

மேலும், ‘ஹைவ்’ பிரிவின் 42 ஊழியர்களில் 27 பேர் புதிய நிறுவனத்துக்கு மாற்றப்படுவர். மற்றவர்கள் இன்கம் நிறுவனத்தின் பிற பிரிவுகளில் பணியமர்த்தப்படுவர். சிங்கப்பூரில் ‘சிம்ப்ளிகோ’ பொதுப் போக்குவரத்துச் செயலி மூலம் மைக்ரோ-இன்சூரன்ஸ் தயாரிப்புகளை வழங்க ஏற்கெனவே திட்டமிட்டுள்ள ‘எம்பெடட் ஃபைனான்சியல்’ குழுமத்துடன் இணைவதன் மூலம், ‘ஹைவ்’ தளம் தென்கிழக்காசியாவைத் தாண்டி உலகளாவிய ரீதியில் தனது சேவையை விரிவுபடுத்த வழிவகை ஏற்படும்.

அண்மையில், அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சிறப்பு நோக்க கையகப்படுத்தல் நிறுவனத்துடன் இணைவதற்கு ‘எம்பெடட் ஃபைனான்சியல்’ குழுமம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம், நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவுள்ள அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ஏறத்தாழ 425 மில்லியன் அமெரிக்க டாலராக (S$547 மில்லியன்) உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
காப்புறுதிவிற்பனைநிறுவனம்இன்கம்