சிங்கப்பூர் ஊழியர்கள் விரைவாக ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்: ஆய்வு

சிங்கப்பூர் ஊழியர்கள் விரைவாக ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்: ஆய்வு

ஆனால் வேலைப் பாதுகாப்பு நம்பிக்கை 15% சரிந்துள்ளது
கோப்புப் படம்: சாவ்பாவ்

12 Oct 2026 - 6:44 pm

2 mins read

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உலகளாவிய அளவைவிட அதிகரித்துள்ள போதிலும், வேலைப் பாதுகாப்பு குறித்த ஊழியர்களின் நம்பிக்கை கடந்த ஈராண்டுகளில் கடுமையாகச் சரிந்துள்ளது.

பிடபிள்யூசி நிறுவனம் திங்கட்கிழமை (அக்டோபர் 12) வெளியிட்ட ‘உலகளாவிய ஊழியரணி நம்பிக்கை, அச்சங்கள் கருத்தாய்வு 2026’ அறிக்கையில், அடுத்த 12 மாதங்களுக்குத் தங்களின் வேலை பாதுகாப்பாக இருக்கும் என்று 69 விழுக்காட்டுச் சிங்கப்பூர் ஊழியர்களே நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒப்புநோக்க இந்த விகிதம் 2024ஆம் ஆண்டில் 84 விழுக்காடாகவும் 2025ல் 72 விழுக்காடாகவும் பதிவாகியிருந்தது. இருப்பினும், உலக அளவில் இந்த நம்பிக்கை மாற்றம் ஏதுமின்றி 84 விழுக்காடாக உறுதியாகவே நிலவுகிறது.

செயற்கை நுண்ணறிவை அன்றாடம் பயன்படுத்துவோரிடையே இந்த நம்பிக்கை 75 விழுக்காடாகவும் அதனைப் பயன்படுத்தாதோரிடம் 61 விழுக்காடாகவும் காணப்படுகிறது.

இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் உலகெங்கும் 48 இடங்களைச் சேர்ந்த ஊழியர்களிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 49,364 பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் சிங்கப்பூரிலிருந்து பங்கேற்றோர் எண்ணிக்கை 1,000 என்று கூறப்பட்டது.

சிங்கப்பூரில் 74 விழுக்காட்டு ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர். இது உலகளாவிய சராசரியான 64 விழுக்காட்டைவிட அதிகம். மேலும், 28 விழுக்காட்டினர் அன்றாடம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகவும் 12 விழுக்காட்டினர் ஏஐ முகவர்களைப் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு தங்களின் வேலைத் தரத்தையும் படைப்பாற்றலையும் அதிகரிப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வெளியீடுகளின் துல்லியம், தரம் குறித்த கவலைகள் அதன் பயன்பாட்டிற்குப் பெரும் தடையாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த மூன்றாண்டுகளில் பொருளியல் கொந்தளிப்பும், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் தங்களின் வேலைப் பாதுகாப்பிற்கு முதன்மையான அச்சுறுத்தல்களாக இருக்கும் என்று சிங்கப்பூர் ஊழியர்கள் தீவிரமாகக் கருதுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு தங்களின் பணிச்சுமையையும் பணியில் சிக்கலையும் அதிகரித்துள்ளதாக ஊழியர்களில் பாதிப்பேர் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்படும் மனச்சோர்வும் களைப்பும் உற்பத்தித்திறனைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளாக உருவெடுத்துள்ளன.

இதன் காரணமாக, பெரும்பாலான ஊழியர்கள் வேலை வழங்குநரை மாற்றுவதைக் காட்டிலும் சம்பள உயர்வு, கூடுதல் சலுகைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

எதிர்காலத்திற்குத் தேவையான தொழிற்திறன்களைப் பெறுவதிலும் பயிற்சி வளங்களை அணுகுவதிலும் ஊழியர்களிடையே இன்னமும் இடைவெளி நிலவுவதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், தேசியத் தொழிற்சங்க காங்கிரசுடன் இணைந்து நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை வாய்ப்புகளையும் ஊதியத்தையும் மேம்படுத்த உறுதுணையாக இருக்க பிடபிள்யூசி சிங்கப்பூர் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுவேலைபாதுகாப்புஆய்வு