ஆசியாவில் புதிய தொழிலதிபர்களை உருவாக்க, சிங்கப்பூரைச் சேர்ந்த இன்சிக்னியா வென்ச்சர்ஸ் பார்ட்னர்ஸ் (Insignia Ventures Partners) நிறுவனம் ஜப்பானின் இவாத்தே மாநில அரசுடன் இணைந்து புதிய நடுவத்தை அமைக்கவுள்ளது.
தென்கிழக்காசிய நாடுகள் மூலம் ஜப்பானில் முதலீடுகளை அதிகரிப்பதே இதன் நோக்கம்.
இதற்கான ஒப்பந்தத்தில் இன்சிக்னியா நிறுவனமும் இவாத்தே ஆளுநரும் அக்டோபர் 29, 30ஆம் தேதிகளில் மோரியோகாவில் நடைபெறும் மாநாட்டில் கையெழுத்திடுவர்.
தொழில் நடுவம் திறக்கப்படும் தேதி இன்னும் முடிவாகவில்லை.
2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இன்சிக்னியா நிறுவனம், இந்தோனீசியா, வியட்னாம், சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
மேலும், அந்நிறுவனம் $1 பில்லியன் மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது.
ஜப்பானிய வணிகக் கலாசாரத்தையும், தென்கிழக்காசியச் சந்தைகளின் பன்முகத்தன்மையையும் இணைத்து இரு தரப்பு இளையர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும்.
மோரியோகாவுக்குத் தெற்கே ஹனமாகி நகரில் மூடப்பட்ட பள்ளிக் கட்டடத்தை இன்சிக்னியா நிறுவனத்திற்கு விற்க இவாத்தே அரசு திட்டமிட்டுள்ளது. சீரமைப்புப் பணிகளுக்கான மானியங்களை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
