சிங்கப்பூரில் ஆகப்பெரிய அளவில் துறைமுகச் செயல்பாடுகளை கவனிக்கும் பிஎஸ்ஏ (PSA) இவ்வாண்டு மட்டும் 40 மில்லியனுக்கும் அதிகமான கொள்கலன்களைக் கையாண்டுள்ளது.
சிங்கப்பூர் வரலாற்றில் ஓராண்டில் இவ்வளவு அதிகமான கப்பல் கொள்கலன்களைக் கையாண்டுள்ளது இதுவே முதல்முறை என்பதால், இது ஒரு பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் துறைமுக முனையங்களைக் கவனிக்கும் பிஎஸ்ஏ மற்றும் ஜூரோங் துறைமுகம் இணைந்து 39.01 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டன.
அந்தச் சாதனையை இப்போது பிஎஸ்ஏ தனியாக முறியடித்துள்ளது. இதற்குமுன் பிஎஸ்ஏ 2023ஆம் ஆண்டு தனி அமைப்பாக 38.8 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டது.
இந்தத் தகவல்களைப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தமது ஃபேஸ்புக் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், சிங்கப்பூர் வழி இவ்வாண்டு எவ்வளவு சரக்குகள் வந்து சென்றன, எவ்வளவு எரிபொருள் கப்பல்களுக்கு விற்கப்பட்டன உள்ளிட்ட தரவுகளை சிங்கப்பூர் துறைமுகம் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் சீ குறிப்பிட்டார்.
கப்பல் துறையில் சாதிக்க முத்தரப்புப் பங்காளித்துவம், வர்த்தகம் பெருக எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனே இது என்றும் அவர் தெரிவித்தார்.
“இதேபோன்று தாமும் தமது சக ஊழியர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கப்பல் துறையில் சிறப்பாக செயல்பட தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம், பல முதலீடுகளை ஈர்த்து வர்த்தகத்தைப் பெருக்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்,” என்று அமைச்சர் சீ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் பொருளியலை உலக நாடுகள் மத்தியில் கொண்டுசேர்க்க துறைமுகச் செயல்பாடுகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை இந்தச் சாதனை எடுத்துக்காட்டுவதாக பிஎஸ்ஏ வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
கடந்த அக்டோபர் மாதம், பிஎஸ்ஏ 647.5 மில்லியன் செலவில் துவாசில் ஒரு கிடங்கைக் கட்டத் தொடங்கியது. அதிநவீன தொழில்நுட்ப உதவியால் சிறப்பான கட்டமைப்பை உருவாக்கி வேகமாக சரக்குகளைக் கையாள அந்த இடம் உதவும் என்ற நோக்கத்தில் அது கட்டப்பட்டு வருகிறது.
2027ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் அது கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கிடங்கு செயல்பாட்டிற்கு வந்தால் மேலும் பல மில்லியன் கொள்கலன்களைக் கையாளமுடியும் எனக் கூறப்படுகிறது.

