மோசடித் தளங்களை முடக்கும் புதிய கட்டமைப்பை அறிமுகம் செய்த சிங்கப்பூர்

மோசடித் தளங்களை முடக்கும் புதிய கட்டமைப்பை அறிமுகம் செய்த சிங்கப்பூர்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Oct 2026 - 5:48 pm

2 mins read

சிங்கப்பூர் பயனீட்டாளர்களைத் தீங்கு விளைவிக்கும் தளங்களுக்கும் மோசடித் தளங்களுக்கு செல்வதிலிருந்து தடுத்துநிறுத்தும் தேசிய அளவிலான கட்டமைப்பை அறிமுகம் செய்துள்ளது.

‘பாதுகாப்புக் களப் பெயர் சேவை’ (பிடிஎன்எஸ்) என்று அழைக்கப்படும் அந்தக் கட்டமைப்பை மூத்த அமைச்சர் கா. சண்முகம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) அறிமுகம் செய்துவைத்தார்.

இணைய அச்சுறுத்தல்களைக் களைவதற்கான புதுப்பிக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு உத்தியின் ஒரு பகுதியாக ‘பிடிஎன்எஸ்’ கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் இணைய அச்சுறுத்தல்கள் இன்னும் துரிதமாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் மாறியிருப்பதால் முன்னெச்சரிக்கையாக, செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட தேசியத் தற்காப்புக் கட்டமைப்பை உருவாக்குவது அவசியமாகி இருப்பதாகக் கருதப்படுகிறது.

“சிங்கப்பூர் முன்கூட்டியே செயல்படும். தேசிய அளவிலும் அச்சுறுத்தல்களின் வேகத்துக்கு நிகராகச் செயல்படும். சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு உத்தியில் இந்த மாற்றம் முக்கியமானது,” என்றார் தேசியப் பாதுகாப்பு, உள்துறை ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரான திரு சண்முகம்.

மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற 11வது சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தில் அவர் உரையாற்றினார்.

இதுவரை உருவாக்கப்பட்ட தேசிய இணையத் தற்காப்பைவிட சிங்கப்பூரின் மேம்படுத்தப்பட்ட இணையப் பாதுகாப்பு உத்தி இன்னும் விரிவானது என்று திரு சண்முகம் விளக்கம் அளித்தார்.

2027ஆம் ஆண்டு நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய ‘பிடிஎன்எஸ்’ கட்டமைப்பை இணையக் குற்றவியல் தீங்குச் சட்டத்தின்கீழ் உள்ள சிங்கப்பூரின் தேசிய இணையப் பாதுகாப்பு தளபத்திய நிலையத்தின் இணையப் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தும்.

2024ஆம் ஆண்டு இணையக் குற்றவியல் தீங்குச் சட்டம் நடப்புக்கு வந்தது. அதன்கீழ், சட்டவிரோத சூதாட்டம், கடன் முதலை, போதைப்பொருள், மோசடி, தவறான இணைய நடவடிக்கைகள் போன்ற குற்றங்கள் தொடர்பானவை என்று சந்தேகிக்கப்படும் உள்ளடக்கங்களை அகற்றவோ, முடக்கவோ தனிநபர்கள் உட்பட நிறுவனங்கள், இணையச் சேவை வழங்குவோர் ஆகியோரிடம் அதிகாரிகள் நேரடியாக உத்தரவிட முடியும்.

அத்தகைய அதிகாரம் சரியான விதத்தில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய புதிய கட்டமைப்பில் பாதுகாப்பு வழிகாட்டிகள் இருக்கும் என்று இணையப் பாதுகாப்பு அமைப்பு சுட்டியது.

இணையத்தளங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது இன்னும் சிரமமாகியுள்ளது. அமைப்பின் ஆக அண்மைய சிங்கப்பூர் இணையத்தள அறிக்கையில் சிங்கப்பூரில் தீங்கால் பாதிக்கப்பட்ட கணினிக் கட்டமைப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இரட்டிப்பானது.

2024ஆம் ஆண்டு 117,300 பாதிக்கப்பட்ட கட்டமைப்புகள் கண்டறியப்பட்டன. கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 284,300 ஆனது.

குறிப்புச் சொற்கள்
இணையப் பாதுகாப்புமோசடிகருவிமயக்கம்