தனது முதலாவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கபடி அணிக்கு, ‘அணிக்கு எழுவர்’ பிரிவில் இணை வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
அத்துடன், நான்கு தேசிய சாதனைகளையும் ஆண்கள் கபடி அணி படைத்துள்ளது. அவை அனைத்தும் போட்டியின் இரண்டாம் நாளன்று கிடைத்த இரு வெற்றிகளின்போது கிட்டியவை.
சிங்கப்பூர் அணி இதுவரை பெற்றுள்ள ஆகப் பெரிய புள்ளி வித்தியாசத்திலான வெற்றி, திமோர் லெஸ்டே உடனான ஆட்டத்தில் கிடைத்தது. 77-19 எனும் புள்ளிக் கணக்கில் அந்த அணியை வீழ்த்தியது.
அதே ஆட்டத்தில், அணித் தலைவரும் தற்காப்பு ஆட்டக்காரருமான விஷ்வ தேவா, ஒன்பது புள்ளிகள் பெற்று தற்காப்பு ஆட்டத்துக்கான தேசிய சாதனைப் படைத்தார். தாக்குதல் ஆட்டக்காரர் ராஜா ஸ்ரீராம், 15 புள்ளிகள் பெற்று தாக்குதல் ஆட்டத்துக்கான தேசிய சாதனைப் படைத்தார்.
பெற்றோருக்கும் அணியினருக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்த ஸ்ரீராம், “இதையடுத்து பல விளையாட்டுகள் வருகின்றன. இச்சாதனையை முறியடிக்கப் பலரும் முன்வருவார்கள் என ஆசைப்படுகிறேன்,” என்றார்.
ஸ்ரீராமின் சாதனையை, அடுத்த ஆட்டத்திலேயே 17 புள்ளிகள் பெற்று முறியடித்தார் அன்பு நவின் அண்ணாதுரை. அதனால், 55-40 என மியன்மாரை சிங்கப்பூர் வென்றது.
“இதற்கு முக்கியக் காரணம் என் பயிற்றுவிப்பாளர்கள் காலித்தும் சுந்தரும்தான். . அவர்கள் மியன்மார் அணியின் தற்காப்பை நன்கு ஆராய்ந்து என்ன உத்திகளைக் கையாளலாம் என அறிவுறுத்தினர். அவர்கள் கூறியதைச் செய்யமுடிந்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. சிறுவயதிலிருந்து எனக்குப் பயிற்சி வழங்கியுள்ள பயிற்றுவிப்பாளர் சிவநேசனுக்கும் என் நன்றி,” என்றார் அன்பு நவின்.
“கபடியில் சூப்பர் டென், ஹை ஃபை என உள்ளது. அதாவது, தாக்குதலில் பத்து புள்ளிகள் தாண்டினாலோ, தற்காப்பில் ஐந்து புள்ளிகள் தாண்டினாலோ பெரிய விஷயம்,” என்றார் பெண்கள் அணியின் பயிற்றுவிப்பாளர் சிவநேசன்.
தொடர்புடைய செய்திகள்
“இப்போட்டிமூலம் எப்படி அணிக்காக விளையாடுவது எனக் கற்றேன். ஒவ்வொரு எதிரணியினருக்கும் ஏற்ப உத்திகள் மாறும். இதைத்தான் பயிற்றுவிப்பாளர்கள் கற்பித்தனர். இதையடுத்து இன்னும் பெரிய மேடைகளை எதிர்கொள்ள நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார் அணித் தலைவர் விஷ்வ தேவா.
அணியின் வெற்றிக்கு, விளையாட்டாளர்களின் குடும்ப ஆதரவும் முக்கியப் பங்காற்றியது. சிலர் தாய்லாந்துக்குச் சென்று ஆதரித்தனர்.
போட்டியின் முதல் நாளன்று (டிசம்பர் 11) இந்தோனீசியாவுடன் மோதி 61-21 எனத் தோல்விகண்டபோது, அணித் தலைவர் விஷ்வ தேவாவின் தந்தை விஷ்ணு, “ரணம் கொண்ட சிங்கப்பூர் சிங்கங்கள் நாளை வெறி கொண்டு வேட்டைக்கு மீண்டும் வரும்,” எனத் தன் மகனிடம் குறுஞ்செய்தி அனுப்பினார்.
மறுநாள் புத்துணர்ச்சியுடன் வெற்றியை நோக்கிச் சீறிப் பாய்ந்த அணி, டிமோ லெஸ்ட், மியன்மார் இரு அணிகளையும் வீழ்த்தியது. மூன்றாம் நாள் இரு ஆட்டங்களிலும் தோற்றாலும் வெண்கலம் உறுதியானது.
பெண்கள் அணிக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாக இருப்பினும், “இப்போட்டியில் எங்கள் அணியின் விளையாட்டைக் கண்டு எங்களுக்குப் பெருமையாக உள்ளது. ஆட்டத்துக்கு ஆட்டம் முன்னேறிவந்துள்ளோம். இதே பாதையில் சென்றால் சிங்கப்பூர் பெண்கள் கபடி அணிக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்,” என்றார் அணித் தலைவர் மித்ரா ரகுராம். “சமூகத்தின் ஆதரவுடன் அவர்கள் இன்னும் பெரும் வளர்ச்சியடைவர் என எதிர்பார்க்கிறேன்,” என்றார் அணியின் பயிற்றுவிப்பாளர் சிவநேசன்.திமோர் லெஸ்டே உடனான இறுதி ஆட்டத்தைப் பொறுத்து, பெண்களுக்கு வெண்கலம் கிடைக்குமா என்பது தெரியும்.

