12வது சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பு வியாழக்கிழமை (டிசம்பர் 4) அன்று, தி ரிட்ஸ்-கார்ல்டன் மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெறும்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சில சாலைகள் மூடப்படும் என்று காவல்துறை, திங்கட்கிழமை (டிசம்பர் 1) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான வருடாந்தர சந்திப்பு, நீண்டகால விவகாரங்களைச் சமாளிப்பதற்கும் ஒத்துழைப்பு தேவைப்படும் புதிய துறைகளில் பணியாற்றுவதற்கும் ஒரு முக்கிய தளமாகும்.
கடந்த ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெற்ற இவ்வாண்டு சந்திப்பில் பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்திக்க மலேசியாவில் உள்ள புத்ராஜெயாவுக்குச் சென்றார். பின்னர், புதிய ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் குறித்த பேச்சுவார்த்தைகளில் கூடுதல் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை இருவரும் அறிவித்தனர்.
ஹோட்டலின் சுற்றுப்புறங்களில் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும் என்று காவல்துறை டிசம்பர் 1ஆம் தேதி தெரிவித்தது.
பொதுமக்கள், காவல்துறையின் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் எந்தவொரு விதிமீறலும் சட்டப்படி கடுமையாகக் கையாளப்படும் என்றும் அது தெரிவித்தது.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், டிசம்பர் 4ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஹோட்டலுக்கு மேலே உள்ள பகுதி தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில், பட்டங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற ஆளில்லா வானூர்திகளை அந்தப் பகுதிக்குள் பறக்கவிடுவது உட்பட அனைத்து ஆகாய நடவடிக்கைகளும் தடைசெய்யப்படும்.

