‘சிங்கப்பூர் மாரத்தான்’ 2026 நெடுந்தொலைவோட்டம்: புதிய ஏற்பாட்டாளர்

2 mins read
addb0ef2-b81e-4921-a864-756c41cd319b
கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நடந்த இரண்டாம் நாள் ஓட்டத்தில் எடுக்கப்பட்ட படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஆண்டிறுதியில் நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயமான ‘சிங்கப்பூர் மாரத்தான்’ போட்டிக்கு 2026ஆம் ஆண்டுமுதல் புதிய ஏற்பாட்டாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் (SportSG)அமைப்பு வியாழக்கிழமை (டிசம்பர் 11) அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டுமுதல் பத்து ஆண்டுகளாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்துவந்த ‘ஐயர்ன்மேன்’ குழுமத்துக்கு அதன் நன்றியையும் ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் தெரிவித்துக்கொண்டது.

“சிங்கப்பூரின் ஒரே தேசிய நெடுந்தொலைவோட்டப் போட்டி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து பங்கேற்க வருவோருக்கு உலகத்தரம் வாய்ந்ததாக அமைவதை உறுதிசெய்வது அமைப்பின் கடப்பாடாக உள்ளது. புதிய ஏற்பாட்டாளரான ‘எஸ்ஜி மெரத்தான்’ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வெற்றிகரமாக போட்டிகள் நடப்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம் ” என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

எஸ்ஜி மெரத்தான் என்பது ‘பெட்டர்மன்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்’ மற்றும் ‘ஸ்கோர் ஸ்போர்ட்ஸ்’ ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பாகும். பல ஆண்டுகளுக்கு போட்டியை ஏற்று நடத்துவதற்கான ஒப்பந்தம் அந்த கூட்டு நிறுவனத்திடம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

எஸ்ஜி மெரத்தானின் இணை நிர்வாகிகளாக சிங்கப்பூரில் இயங்கும் பெட்டர்மன்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு லியோன் டாய், மலேசியாவின் ஸ்கோர் நிறுவனத்தின் தலைவர் பெட்ரிஷியா டான் ஆகியோர் பணியாற்றவுள்ளனர்.

அறிவுசார் சொத்துருவாக்கம், விளையாட்டாளர்கள் நிர்வாகம், ஆலோசனை போன்ற துறைகளில் சிறப்புக் கவனம் செலுத்தும் நிறுவனம் பெட்டர்மன்ட்ஸ் ஆகும்.

மலேசியாவில் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்கோர், மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்கும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகள் குறிப்பாக ஓட்டப்பந்தயங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனமாகும்.

ஸ்கோர் நிறுவனத்தின் நிர்வாகத்துக்குச் சான்றாக முதன்முதலில் 2014ஆம் ஆண்டு, மலேசியாவில் அரங்கேறிய ‘ஸ்கோர் ரன்’ பந்தயத்தில் 3,674 போட்டியாளர்கள் பங்கேற்றனர். கடந்த 2024ஆம் ஆண்டு அதே போட்டியில் 33,000 போட்டியாளர்கள் கலந்துகொண்டு வரலாறு படைத்தனர். அந்நிறுவனம் சிங்கப்பூரில் அதன் அலுவலகத்தை இவ்வாண்டு தொடக்கத்தில் திறந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்