சிங்கப்பூர் வாகனவோட்டிகள் தங்களுக்கு விதிக்கப்படும் போக்குவரத்து அபராதங்களை விரைவாகச் செலுத்தினால் 30 வெள்ளி வரை கழிவுகளைப் பெறலாம்.
இந்தப் புதிய விதிமுறை 2026ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நடப்புக்கு வருகிறது. அபராதம் விதிக்கப்பட்ட நாளிலிருந்து 14 நாள்களுக்குள் வாகனவோட்டிகள் அபராதத்தைச் செலுத்தினால் மட்டுமே அந்தக் கழிவு கிடைக்கும்.
நீதிமன்றம் செல்லத் தேவையில்லாத சிறுசிறு போக்குவரத்து தவறுகளைச் செய்பவர்களுக்கே இது பொருந்தும் என்று போக்குவரத்து காவல்துறை திங்கட்கிழமை (டிசம்பர் 1) வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்தது.
இபிஎஸ் (EPS) என்று அழைக்கப்படும் ‘முன்னரே தொகையைச் செலுத்தும் திட்டம்’ மூலம் தேவையில்லாத மேல்முறையீடுகளைத் தவிர்க்க முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இபிஎஸ் விதிமுறை உள்ளூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே என்றும் அபராதத் தொகை 50 வெள்ளி அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே கழிவு வழங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
வாகனவோட்டிகள் இபிஎஸ் திட்டத்திற்குத் தகுதியானவர்களா என்பதை என்டிஓ (NTO) என்னும் போக்குவரத்துவிதிமீறல் அறிவிப்பு அறிக்கைமூலம் தெரிந்துகொள்ளலாம்.
14 நாள்களுக்குப் பிறகு அபராதம் செலுத்தினால் கழிவு கிடைக்காது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
2024ஆம் ஆண்டு சராசரியாக மாதம் 6,000 ‘என்டிஓ’ அனுப்பப்படும். அதில் 1,000க்கும் அதிகமானவை மேற்முறையீட்டுக்கு வந்தன என்று அதிகாரிகள் கூறினர்.

