வரியைக் குறைக்க அமெரிக்காவோடு தொடர்ந்து பேச்சு நடத்தப்படும்: துணைப் பிரதமர் கான்

வரியைக் குறைக்க அமெரிக்காவோடு தொடர்ந்து பேச்சு நடத்தப்படும்: துணைப் பிரதமர் கான்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

26 Nov 2026 - 7:53 pm

2 mins read

அமெரிக்கா முன்மொழிந்துள்ள புதிய வரியைக் குறைப்பதற்குச் சிங்கப்பூர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.

வரியைக் குறைக்க, சிங்கப்பூர் சிறிது விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் இறுதி வரி விகிதம் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள 10 விழுக்காட்டிற்கும் 20 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டதாக அமையக்கூடும் என்றும் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கான சிங்கப்பூரின் ஏற்றுமதியில் சுமார் $9.4 பில்லியன் மதிப்பிலான பொருள்கள், இந்தப் புதிய வரி விதிப்பால் பாதிக்கப்படக்கூடும் என்று எரிசக்தி, வர்த்தக, தொழில் துறை அமைச்சருமான திரு கான் கூறினார்.

வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. ஒரு முக்கிய வர்த்தகப் பங்காளியிடமிருந்து நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை,” என்றார்.

பகுதி மின்கடத்திகள், மருந்துப் பொருள்கள் ஆகியவை இந்தப் புதிய வரிகளின் கீழ் வரமாட்டா. அவ்வகையில், அமெரிக்காவிற்கான சிங்கப்பூரின் நேரடி ஏற்றுமதியில் ஏறத்தாழ 33 விழுக்காடு இதனால் பாதிக்கப்படும்.

20 விழுக்காடு வரையிலான இந்தப் புதிய வரிகளால், சிங்கப்பூர்ப் பொருள்கள் மீதான ஒட்டுமொத்த வரி விகிதம் 7.8 விழுக்காட்டிலிருந்து 10.3 விழுக்காடாக உயரும் என்றும் அவர் கூறினார்.

“சிங்கப்பூரின் பொருளியல் கட்டமைப்பு தனித்துவமானது. இதனை அமெரிக்காவிடம் தொடர்ந்து எடுத்துரைப்போம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் ஆய்வு முடிவுகள் சிங்கப்பூரின் பொருளியல் கட்டமைப்பைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டதாகத் துணைப் பிரதமர் கான் கூறினார்.

இயற்கை வளங்கள் இல்லாத சூழலையும் சிறிய உள்நாட்டுச் சந்தையையும் கொண்டுள்ள சிங்கப்பூர், வேலைவாய்ப்புகளை உருவாக்க வர்த்தகத்தையும் உற்பத்தித் துறையையுமே நம்பியுள்ளது. “எனவே, பேச்சுவார்த்தைகளின்போது சிங்கப்பூரின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் நடைபெற்ற ஏபெக், ஆசியான் மாநாடுகளில் பிரதமர் லாரன்ஸ் வோங் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்தித்தபோது, புதிய வரி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனத் துணைப் பிரதமர் கான் தெரிவித்தார்.

இந்தப் புதிய வரியால் ஆசியானின் மற்றச் சில நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூர், அவற்றுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்று கூறப்பட்டது.

பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு உதவச் சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவுடன் (SERT) இணைந்து அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்