உலகப் பணக்கார நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம்: இந்திய ஆய்வு

1 mins read
df43beeb-cbce-4c79-9927-2d67743d5ec3
சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்தியாவில் இயங்கும் விமானப் போக்குவரத்து செய்தித் தளமான ‘ஏவியேஷன் ஏடுஇசட்’ (Aviation A2Z) 2025ஆம் ஆண்டிற்கென நடத்திய ஆய்வில் உலகப் பணக்கார நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

தனிநபர் வருமானத்தைக் (ஜிடிபி) கொண்டு கணிக்கப்பட்ட ஆய்வில் $203,230.72 (US$156,760) மதிப்புடன் சிங்கப்பூர் முதலிடத்திலும், $198,259.25 (US$152,920) மதிப்புடன் லக்சம்பர்க் இரண்டாம் நிலையிலும் வந்துள்ளன.

மக்காவ் மூன்றாம் இடத்தில் $173,784.20 (US$134,040) தனிநபர் வருமானத்துடன் உள்ளது.

இந்த விவரங்களை ஏஷியா1 ஊடகம் வெளியிட்டுள்ளதாக மலேசிய ஊடகமான மலாய் மெயில் திங்கட்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்தது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்துடன் மக்கள்தொகையை வகுத்து, தனிநபர் வருமானம் கணக்கிடப்படுகிறது.

உலகின் முக்கிய வர்த்தகம் இடம்பெறும் கடல்பாதையில் உள்ள சிங்கப்பூரின் அமைவிடம், வர்த்தகங்களுக்கு ஏற்ற அரசாங்கத்தின் கொள்கை, அரசியல் நிலைத்தன்மை, வலுவான நிதிநிலை, அதிநவீன உள்கட்டமைப்பு ஆகியன பல நாடுகளையும் செல்வந்தர்களையும் சிங்கப்பூரை நோக்கி ஈர்ப்பதாக ஏவியேஷன் ஏடுஇசட் குறிப்பிட்டது.

வெளியிடப்பட்ட பட்டியலில் சிங்கப்பூரைத் தவிர்த்து, தென்கிழக்காசியாவில் இடம்பெற்ற ஒரே நாடு புருணை.

அது தனிநபர் வருமானமாக S$95,760 (US$73,850) மதிப்பைப் பெற்று எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி, ஹலால் சான்று பெற்ற உணவு விநியோகம், இஸ்லாமிய நிதி நிர்வாகம், சுற்றுச்சூழல்சார் சுற்றுலா ஆகியன அந்நாட்டின் வளத்துக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்