ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டாய் கடற்கரையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராகச் சிங்கப்பூர்ச் சமய அமைப்புகள் ஒன்றிணைந்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
உலகம் ஆபத்தான இடமாக மாறிவருவது கவலையளிப்பதாக முயிஸ் எனும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் பதிவிட்டது. வெறுப்பும் பயமும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டு சமூகங்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டதுடன், இச்சம்பவம், கனிவு, மரியாதை, கழிவிரக்கத்துடன் கூடிய ஒன்றிணைந்த சமூகமாக மாறவேண்டும் என்பதை நினைவூட்டுவதாகவும் கூறியது.
எந்த வகையான சமய வெறுப்பும், மனிதகுலத்திற்கும், பண்பட்ட சமூகத்தின் கொள்கைகளுக்கும் எதிரானவை என்று இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறின.
உலக அமைதியையும் பாதுகாப்பையும் குலைக்கும் இவ்வகை கொடூரமானச் செயல்களை நிராகரிக்க, தேசத்துடன் நிற்பதாகவும் அவை தெரிவித்தன.
இத்தகைய பயங்கரவாதச் செயல்கள் மனித வாழ்க்கையின் புனிதத்தன்மையை மீறுவதாகும் என்று தெரிவித்த சிங்கப்பூர்த் திருச்சபைகளின் தேசிய மன்றம், நம்மைப் போலவே பிறரை நேசிக்கவும் அமைதியைப் பின்பற்றவும் அழைப்பு விடுக்கும் கிறிஸ்துவின் போதனைகளுக்கு, இது முரணானது என்றும் பதிவு செய்தது.
யூதர்களுக்கு எதிரான இந்தச் சம்பவம், சமய, இன வெறுப்புகள் ஆகியவை, உலக அளவில் ஒரு பேரிடராகவே உள்ளதைத் தெளிவாக நினைவூட்டுகிறது என்று குறிப்பிட்டது அனைத்து சமய மன்றம். அனைத்து நம்பிக்கைகளிலும் புனிதமாகக் கருதப்படும் அமைதி, மரியாதை, மனிதநேயம் ஆகியவற்றுக்கு இது எதிரானது என்றும் அது கூறியது. ஒரு சமூகத்தின் மீதான தாக்குதல் என்பது நல்லிணக்கக் கட்டமைப்பின் மீதான தாக்குதலாகும் என்றும் கண்டித்துள்ளது.
இந்நாகரிக உலகில், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல் கண்டிக்கத்தக்கது என்று சிங்கப்பூர் பெளத்தக் கூட்டமைப்பு பதிவிட்டது.
சிங்கப்பூரிலும், அனைத்துலக அளவிலும் இன, சமய நல்லிணக்கத்தைப் பேணுவது கடிமானது என்பதை இச்சம்பவம் தெளிவாக நினைவூட்டியதாகவும் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
வன்முறைக்கும் வெறுப்புக்கும் எதிர்காலத்தில் இடமில்லையென்ற சிங்கப்பூர் யூத சமூகநலக் கழகம், புரிதல், இரக்கம், ஒற்றுமை ஆகியவற்றை நிலைநிறுத்த அனைத்து சமயக் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் பொறுத்துக்கொள்ள முடியாதவை என்று கூறியுள்ள சீக்கிய ஆலோசனை மன்றம், பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தது.
இந்த அர்த்தமற்ற வெறுப்புச் செயல் என்று கண்டித்த தாவோயிசக் கூட்டமைப்பு, இது ஒற்றுமையைக் கற்பித்த வேதனையான பாடம் என்றும் பதிவிட்டது.
இத்துயரமான சம்பவம் வருத்தமளிப்பதாகத் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம், “இவ்வகை வன்முறைச் செயல்களுக்கு நமது சமூகத்தில் இடமில்லை. பள்ளிவாசல், தேவாலயம், கோவில், ஜெப ஆலயம் என எதுவாக இருந்தாலும், அனைவரும் தங்கள் நம்பிக்கையைச் சுதந்திரமாகவும் பயமின்றியும் பின்பற்றப் பாதுகாப்பாக உணர வேண்டும்,” என்றார்.
இது போன்ற தருணங்களில், நமது பல்லினச் சமூகத்தின் கலாசாரக் கூறுகளை நிலைநிறுத்துவதுடன், வெறுப்பு, பயங்கரவாதம் ஆகியவற்றை நிராகரிப்பதும் மிகவும் முக்கியம் என்றும் பதிவிட்டுள்ளார்.
“சிங்கப்பூரில் உள்ள மலாய்/முஸ்லிம் சமூகம், அனைத்து சமூகங்களுடன் நல்லிணக்கத்துடன், அமைதியாக வாழ்வதில் உறுதிப்பாடு கொண்டுள்ளது,” என்றும் தெரிவித்துள்ளார்.

