தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைப்பேசிகளின் ஆயுள்காலத்தை அதிகரிக்கும் சிங்கப்பூர் நிறுவனம்

2 mins read
20a471da-de4c-4a5d-a81d-1b507a9814d4
சின்ச் நிறுவனம் சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அது இதுவரை கிட்டத்தட்ட 10,000 மின் கருவிகளை வாடகைக்கு விட்டுள்ளது. - படம்: சின்ச்

சிங்கப்பூரர்கள் ஒவ்வொரு 2.7 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதிய கைப்பேசியை வாங்குகிறார்கள். இதன்மூலம் அந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 2.9 மில்லியன் கைப்பேசிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இதை உணர்ந்த சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று கைப்பேசிகளைக் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.

உலக அளவில் ஒவ்வொருவரும் 3.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கைப்பேசிகளை வாங்குகிறார்கள். ஆனால் சிங்கப்பூரின் சின்ச் (Cinch) நிறுவனம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குக் கைப்பேசிகளைப் பயன்பாட்டில் வைக்கிறது.

சின்ச் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குக் கைப்பேசிகளை விற்காமல் வாடகைக்குக் கொடுக்கிறது.

வாடிக்கையாளர் வாடகைக் காலம் முடிந்தவுடன் கைப்பேசியை நிறுவனத்திடம் கொடுத்து விடுவார். அதன் பின்னர் நிறுவனம் கைப்பேசியைச் சுத்தம் செய்துவிட்டு மற்ற வாடிக்கையாளருக்கு வாடகைக்குக் கொடுக்கும்.

இவ்வாறு செய்வதன் மூலம் கைப்பேசிகள் அதன் சராசரி ஆயுள் காலத்தைவிட அதிக நாள்கள் சேவையில் இருக்கும் என்று சின்ச் தெரிவித்தது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கிட்டத்தட்ட 37 மில்லியன் முதலீட்டையும் சின்ச் நிறுவனம் பெற்றுள்ளது.

கைப்பேசி மட்டுமல்லாது மடிக்கணினி உள்ளிட்ட பல மின் கருவிகளைச் சின்ச் நிறுவனம் மாத வாடகைக்கு வழங்குகிறது.

Samsung Galaxy S25 Edge (512GB) கைப்பேசியின் மாத வாடகை 70 வெள்ளி. இரண்டு ஆண்டுகளுக்கு வாடிக்கையாளர் அந்தக் கைப்பேசியை வைத்திருந்தால் அவர் 1,680 வெள்ளி வாடகையாகச் செலுத்த வேண்டும். அந்தக் கைப்பேசியின் சந்தை விலை 1,808 வெள்ளி.

அதேபோல் iPhone 16 Pro Max (512GB) கைப்பேசியின் மாத வாடகை 120 வெள்ளி. ஓர் ஆண்டுக்கு வாடிக்கையாளர் அந்தக் கைப்பேசியை வைத்திருந்தால் அவர்1,440 வெள்ளி வாடகையாகச் செலுத்த வேண்டும். அந்தக் கைப்பேசியின் சந்தை விலை 2,199 வெள்ளி.

சின்ச் நிறுவனம் சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அது இதுவரை கிட்டத்தட்ட 10,000 மின் கருவிகளை வாடகைக்கு விட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்