புகைமூட்டத்தை விளைவிக்கும் காட்டுத்தீக்கு எந்த நிறுவனங்கள் காரணமாக இருக்கக்கூடும் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
தேவைப்படும்போது சிங்கப்பூர், எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தின்கீழ் (Transboundary Haze Pollution Act) நடவடிக்கை எடுக்கும் என்றும் மற்ற நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயும் என்றும் அவர் வியாழக்கிழமை (அக்டோபர் 15) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
“வானிலையையோ காற்றையோ எல்லை தாண்டி நிகழும் சம்பவங்களையோ நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
“ஆனால், புகைமூட்டத்துக்கான அடிப்படைக் காரணங்களை அறிய அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு, சிங்கப்பூரர்களைப் பாதுகாக்க ஆன அனைத்தையும் செய்வோம்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
புகைமூட்டத்துக்கான காரணம்
காடுகள், மக்குநிலங்கள் (peatland) ஆகியவற்றில் ஏற்படும் தீயினால்தான் புகைமூட்டம் எழுவதாகத் திரு வோங் சுட்டினார். வறண்ட வானிலை என்றையும்விட அதிக காலம் நீடிப்பதால் இப்பிரச்சினை மோசமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்தோனீசியாவுக்கு நாங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளோம். பிரச்சினையைக் கையாள அவர்களுடனும் ஆசியான் பங்காளிகளுடனும் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்றும் அவர் சொன்னார்.
தென்கிழக்காசியாவைப் பாதித்துள்ள புகைமூட்டத்தை விளைவிக்கும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் உதவியைத் தமது நாடு ஏற்றுக்கொள்ளும் என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் அர்மனந்தா நாசர் வியாழக்கிழமை கூறியிருந்தார்.
சிங்கப்பூரில் நிலைமையைக் கையாள அரசாங்கம், எளிதில் பாதிக்கப்படக்கூடிய சிங்கப்பூரர்களுக்கு முகக்கவசங்களை விநியோகித்துவருகிறது. என்95 முகக்கவசங்களும் அவற்றில் அடங்கும்.
மேலும், சமூக மன்றங்களிலும் குறிப்பிட்ட சில குடியிருப்பாளர்க் கட்டமைப்பு, வசிப்போர் குழு நிலையங்களில் குளிரூட்டப்பட்ட பாதுகாப்புப் பகுதிகளும் அமைத்துத் தரப்பட்டுள்ளன.
உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவு
இவ்வேளையில், உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவு வழங்கப்படும் என்றார் பிரதமர் வோங்.
“மோசமடைந்துவரும் புகைமூட்டம் நம் எல்லோரையும் பாதிக்கிறது. அதனால் உங்களையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனித்துக்கொள்ளுங்கள்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தின்கீழ் தவறு இழைத்திருக்கக்கூடிய நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுப்பது குறித்துச் சிங்கப்பூர் ஆராயக்கூடும் என்று தெரிவிக்கும் வகையில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ புதன்கிழமை (அக்டோபர் 14) கூறியிருந்தார்.
