சிங்கப்பூரர்கள் செய்தி ஊடகங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை அனைத்துலக சராசரியைவிட தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. செய்திகளைத் தவிர்க்கும் போக்கும் குறைவாக இருப்பதாக ராய்ட்டர்ஸ் கழகம் நடத்திய வருடாந்திர கருத்தாய்வு சுட்டுகிறது.
சிங்கப்பூரில் முக்கிய செய்தி ஊடகங்கள் மக்கள் அதிகம் நம்பும் ஊடகமாகத் தொடர்ந்து நிலைப்பெற்றுள்ளன. அதில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு முன்னணி வகிக்கிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டை 75 விழுக்காட்டினர் நம்புகின்றனர். அதையடுத்து சிஎன்ஏ (CNA) செய்தி நிறுவனத்தை 74 விழுக்காட்டினரும் சேனல் 5 செய்தி ஒளிவழியை 73 விழுக்காட்டினர் நம்புகின்றனர்.
மின்னிலக்க செய்தி அறிக்கை 48 சந்தைகளில் உள்ள 100,000 பேரிடம் கருத்தாய்வு நடத்தியது. அவர்களில் 2,014 பேர் சிங்கப்பூரில் உள்ளவர்கள். அவர்களில் 45 விழுக்காட்டினர் பெரும்பாலான நேரங்களில் செய்திகளை நம்புவதாகத் தெரிவித்தனர்.
சிங்கப்பூர் உலக அளவில் 15 இடத்திலும் ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் மூன்றாவது இடத்திலும் பட்டியலிடப்பட்டது. தாய்லாந்து 55 விழுக்காட்டைப் பெற்று முதலிடத்திலும் ஹாங்காங் 52 விழுக்காட்டைப் பெற்று இரண்டாவது இடத்திலும் வந்தன.
செய்தியின் மீதான நம்பிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் நிலையாக இருக்கிறது.
இதற்கிடையே, அக்ஸ்ஃபர்டை அடிப்படையாகக் கொண்ட கழகம் நடத்திய ஆய்வில் செய்திகளைத் தவிர்க்கும் விகிதம் இவ்வாண்டு உச்சத்தை எட்டியது.
உலக அளவில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் செய்திகளை அவ்வப்போது அல்லது அடிக்கடி தவிர்ப்பதாகக் கூறினர். கடந்த ஆண்டு அந்த விகிதம் 39 விழுக்காடாக இருந்தது. 2017ஆம் ஆண்டு அது 29 விழுக்காடாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
போர், பூசல் ஆகியவை தொடர்பில் அதிகமாக வெளிவரும் செய்திகளாலும் அளவுக்கு அதிகமாக வரும் செய்திகளாலும் செய்திகளைத் தவிர்ப்பதாகப் பலர் கூறினர்.
சிங்கப்பூரில் செய்திகளைத் தவிர்ப்பதாகக் குறிப்பிட்டோரின் விகிதம் 27 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரில் பெரும்பாலோர் இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் வழி செய்திகளைப் பெறுவதாகக் குறிப்பிட்டனர்.
சிங்கப்பூரில் செய்தியைப் பெற கிட்டத்தட்ட 33 விழுக்காட்டினர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் யூடியூப், இஸ்டகிராம், டிக்டாக் ஆகியவை செய்திகளை வழங்குவதில் மக்களிடையே பிரபலமாகி வருகின்றன.
யூடியூப் வழி 32 விழுக்காட்டினரும் இன்ஸ்டகிராம் வழி 24 விழுக்காட்டினரும் செய்திகளைப் பெறுவதாகக் கூறினர். டிக்டாக் வழி 18 விழுக்காட்டினர் செய்திகளைப் பெறுகின்றனர்.

