செல்வ நிர்வாக நடுவமாகச் சிங்கப்பூர் சிறந்து விளங்கும்: கான் கிம் யோங்

செல்வ நிர்வாக நடுவமாகச் சிங்கப்பூர் சிறந்து விளங்கும்: கான் கிம் யோங்

படம்: புளூம்பெர்க்

14 Oct 2026 - 7:51 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமையன்று (அக்டோபர் 14) நடைபெற்ற புளூம்பெர்க் புதிய பொருளியல் கருத்தரங்கு 2026 எனும் கூட்டத்தில் சிங்கப்பூர் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் கலந்துகொண்டார்.

கருத்தரங்கிற்கு இடையே புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் ஒன்றை வழங்கினார்.

அதில், செல்வ வளம் மிக்க உலகப் பணக்காரர்கள் தங்கள் சொத்துகளைப் பாதுகாப்பாக நிர்வகிக்கச் சிங்கப்பூரை முழுமையாக நம்பலாம் என அவர் உறுதியளித்தார்.

மேலும், செல்வந்தர்கள் தங்களது சொத்துகளைச் சேமித்து வைக்க விரும்பும் ஆகச் சிறந்த முதன்மை இடமாகச் சிங்கப்பூர் திகழ்வதாக அவர் சுட்டினார்.

ஹாங்காங், துபாய் போன்ற பிற முன்னணி அனைத்துலகச் செல்வ நிர்வாக நடுவங்களுடன் சிங்கப்பூர் போட்டியிடுவது குறித்துப் பேசிய அவர், சிங்கப்பூர் மேலும் வேகமாகவும் கடுமையாகவும் உழைக்க வேண்டும் என்றார்.

“போட்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நாட்டின் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் தற்போதைய சூழலுக்கு ஏற்பப் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் செல்வ நிர்வாக நடவடிக்கைகளைச் சீராகச் செயல்படுத்தவும் அமைப்பின் செயல்திறனைத் தொடர்ந்து மேம்படுத்தவும் வழிவகை செய்யப்படுகிறது,” எனத் துணைப் பிரதமர் கான் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியாவுடனான இருதரப்புப் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று நாள் பயணமாக அவர் இந்தியா சென்றுள்ளார்.

இந்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் புளூம்பெர்க் கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டார்.

புவிசார் அரசியல் பதற்றங்கள், பருவநிலை மாற்றங்கள் ஆகியவற்றால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், விநியோகத் தொடர் மீள்திறனில் சிங்கப்பூர் முதலீடு செய்வது மிகவும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

அதற்காக இயற்கை எரிவாயு ஆதாரங்களைப் பன்முகப்படுத்துவது, அணுசக்தி பயன்பாட்டுச் சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து ஆராய்வது போன்ற பல்வேறு முக்கிய நடவடிக்கைகளைச் சிங்கப்பூர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மேலும், 2045ஆம் ஆண்டுக்குள் வட்டாரப் பசுமை எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்ய திட்டமிடப்பட்டுள்ள ஆசியான் எரிசக்தி கட்டமைப்புத் திட்டம் குறித்தும் அவர் பேசினார்.

குறிப்புச் சொற்கள்
முதலீடுதுணைப் பிரதமர்செல்வந்தர்