உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் சிங்கப்பூர் தொடர்ந்து செயலாற்றி வருவதாகத் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான திரு கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
பிளவுபட்டுள்ள இன்றைய உலகச் சூழலில் அந்த அமைப்பைச் சீர்திருத்துவது சவாலானது என்றாலும் சிங்கப்பூர் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் சொன்னார்.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற ஐந்தாவது ‘ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026’ன் சிறப்புக் கலந்துரையாடலில் திரு கான் பங்கேற்றார். இக்கலந்துரையாடலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டின் வெளிநாட்டு விவகாரப் பிரிவு ஆசிரியர் லி ஸியூயிங் வழிநடத்தினார்.
அரசியல் ஆய்வாளரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தின் முன்னாள் தலைவருமான திரு கிஷோர் மஹ்புபானி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திரு கான், உலக வர்த்தக அமைப்பின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் அம்சங்களைச் சுட்டினார்.
அவற்றில், வர்த்தகச் சர்ச்சைகளுக்குத் தீர்வுகாணும் மேல்முறையீட்டுப் பிரிவு முறையாகச் செயல்படாததும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய நடைமுறையும் அடங்கும். எனினும், மின்னிலக்க வர்த்தகம் உள்ளிட்ட புதிய முயற்சிகள் மூலம் உலக வர்த்தக அமைப்பை மேலும் திறம்படச் செயல்படும் அமைப்பாக மாற்றச் சிங்கப்பூர் பங்களித்து வருவதாகத் திரு கான் கூறினார்.
ஆசியானின் 11 உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளும் பன்முகத்தன்மையுமே அதன் பலம் என்றார் அவர்.
சிங்கப்பூரின் அளவு குறித்துப் பேசிய திரு கான், நிலம், மனிதவளம், எரிசக்தி ஆகிய வளங்களில் சிறிய நாடாக இருப்பது ஒரு தடையாகக் கருதப்பட்டாலும், அதுவே நாட்டின் தனித்துவமான பலமாகவும் அமைந்துள்ளது என்றார்.
“சிறிய பரப்பளவு காரணமாக சிங்கப்பூரால் விரைவாகவும் நீக்குப்போக்குடனும் செயல்பட முடிகிறது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப முதலீட்டாளர்களுக்கு உடனடியாக நிலத்தையும் உரிமங்களையும் வழங்குவதுடன், நிறுவனங்களுடன் இணைந்து விரைவாக முடிவுகளை எடுப்பதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான பங்காளித்துவம் குறித்துப் பேசிய அவர், 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் 11 நாடுகளைக் கொண்ட ஆசியானுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவது மிகவும் கடினமானது என்றார்.
இருப்பினும், சிங்கப்பூர் அடுத்த ஆண்டு ஆசியானின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது, மின்னிலக்கப் பொருளியல் துறையில் இரு அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அனைத்துலக உறவுகளிலும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலும் கொள்கை சார்ந்த நிலைப்பாட்டையும் நம்பிக்கையையும் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் திரு கான் வலியுறுத்தினார்.
“சிங்கப்பூர் யாருக்கும் அடிபணியாது. எத்தகைய வெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகளிலும் நாட்டின் தலையாய நலன்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.
“வெளிப்புறச் சூழல் எப்படி மாறினாலும் நாம் யாருக்காகவும் நமது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல் நேர்மையுடன் செயல்படும் நம்பகமான நாடாகத் தனித்து நிற்பதே சிங்கப்பூரின் அடையாளம்,” என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு ஓசிபிசி வங்கி முதன்மை ஆதரவாளராகச் செயல்படுகிறது. அமேசான் வெப் சர்வீசஸ் அதிகாரபூர்வ ‘கிளவுட்’ பங்காளியாகவும் மரினா பே சேண்ட்ஸ் அதிகாரபூர்வ இடவசதி பங்காளியாகவும் இணைந்துள்ளன.
