எதிர்பார்ப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்ற வருத்தத்துடனும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது எனும் எண்ணத்துடனும் 2025ஆம் ஆண்டை சிங்கப்பூர் ஊழியர்கள் நிறைவுசெய்யவுள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் கண்டறியப்பட்டன.
அதே வேளையில், முதலாளிகள் ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டோம் என நம்புவதாகவும் ஆய்வுகளின் முடிவுகளும் மனிதவள வல்லுநர்களின் கருத்துகளும் கூறுகின்றன.
கடந்த இரு மாதங்களில் அதாவது அக்டோபரிலிருந்து 500 ஊழியர்கள், 300 முதலாளிகள் ஆகியோரிடம் ‘சீக்’ (Seek) எனும் வேலை தொடர்பான இணையவாசல் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
அதன் முடிவுகளும் 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முந்தையை ஆய்வின் முடிவுகளும் முரண்பாடாய் தெரிவதாக ‘சீக்’ குறிப்பிட்டது.
ஊழியர்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய முதலாளிகள் ஊதியத்தையும் சலுகைகளையும் உயர்த்தியதாக முந்தைய ஆண்டின் கருத்தாய்வில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தற்போது 10ல் எட்டு ஊழியர்கள் வேலைக்கு எடுக்கும்போது இருக்கும் எதிர்பார்ப்பை அதன் இயல்புநிலை பூர்த்திசெய்யவில்லை எனக் கூறுவதாக அந்த இணையவாசல் சொன்னது.
மேலும், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் பணிக்குச் சேர்ந்த முதல் மூன்று மாதங்களிலேயே அந்த வேலை தங்களுக்குப் பொறுத்தமானதல்ல எனும் முடிவுக்கு வந்துவிடுவதாகவும் அது தெரிவித்தது.
உதாரணமாக அவர்களின் சம்பளம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளின் வெளிப்பாடாய் இல்லாதபோதும் வேலைக் கலாசாரம் மோசமாக இருப்பதாக உணரும்போதும் அவர்கள் அம்முடிவுக்கு வருவதாக அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
மறுபுறம், 10 மேலாளர்களில் ஒன்பது பேர், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்த சிறிது காலங்களிலே தங்களின் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வதாகக் கூறினர்.
மேலாளர்களின் கூற்றுகளைக் கிட்டத்தட்ட பெரும்பாலான ஊழியர்கள் ஒப்புகொண்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மனநலன், நல்வாழ்வை அதற்குக் காரணங்களாகச் சுட்டிக்காட்டியதாகவும் ‘சீக்’ நடத்திய ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டன.

