ஜோகூர் பாருவில் சிங்கப்பூர் வாகனப் பயணியின் வெறித்தனம்

2 mins read
40e1890f-ffd5-48e7-8c64-2ec6fcf0fef9
கையில் கடப்பிதழ்களுடன் நிற்கும் மாது (இடது). - படம்: நூர் ஆய்ஸ்யா

ஜோகூர் பாருவில் சிங்கப்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரு கார்களுக்கிடையே வழிவிடாமல் போனதால் நிகழ்ந்த சிறு மோதலில், ஒரு கார் பயணி மற்றொரு காரில் இருந்தோரின் கடப்பிதழ்களைப் பறித்துச் சென்றார்.

இச்சம்பவம் டிசம்பர் 1ஆம் தேதி மாலை 4.54 மணியளவில், அந்த வாகனங்கள் ஜோகூர் பாரு சோதனைச்சாவடிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் நடந்தது.

சிங்கப்பூர் திரும்பிக்கொண்டிருந்தபோது நடந்த சாலை வெறித்தனம் என்று சந்தேகிக்கப்படும் இந்தப் பிரச்சினையில் கடப்பிதழ்களை இழந்து தவித்த தம் பெற்றோர் தாக்கப்பட்டதாகவும் அவர்களது காரின்மீது பொருள்களும் குப்பையும் வீசப்பட்டதாகவும் மகள் ஆய்ஸ்யா, மதர்ஷிப் ஊடகத்திடம் கூறினார்.

கடப்பிதழ்கள் இல்லாததால் தம் பெற்றோரால் சிங்கப்பூர் திரும்பமுடியாமல் போனதாகக் கூறிய அவர், பின்னால் வந்த வாகனத்தில் பதிவான காணொளியைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.

சிங்கப்பூர் பதிவு எண்ணைக் கொண்ட ஒரு வாகனம் வலதுபக்கம் வருவதற்கான சமிக்ஞை விளக்குகளைப் பயன்படுத்தாமல் ஆய்ஸ்யாவின் பெற்றோர் சென்றுகொண்டிருந்த பாதையில் நுழைய முயல்வது காணொளியில் தெரிகிறது.

இரு வாகனங்களும் உரசிக்கொண்ட பிறகு, தமது வாகனத்திலிருந்து வெளியேறிய ஒரு மாது, பாதிக்கப்பட்ட வாகனத்தை உதைத்துக் குத்தியதோடு கதவை வலுக்காட்டாயமாகத் திறந்ததாகக் கூறப்படுகிறது.

ஆய்ஸ்யாவின் தந்தை திரு சூ, வாகனத்தின் எச்சரிக்கை ஒலியை (ஹார்ன்) பலமுறை எழுப்பியும் அந்த வாகனம் வலது புறமாகத் தொடர்ந்து பாதையை வழிமறித்து நுழைந்தது. அந்த மாது, ஆய்ஸ்யாவின் தாயார் திருவாட்டி நோராவை மூக்கில் குத்தியதாகக் கூறப்படுவதைக் காணொளி பதிவுசெய்யவில்லை.

பெற்றோரை வாகனத்திலிருந்து வெளியில் வரும்படிச் சொன்ன அந்த மாதுடன் இருந்த ஆண் ஓட்டுநர், தமது வாகனத்துக்கு ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிடுமாறு கூறினார்.

கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், வாகனத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கடப்பிதழ்களைப் பறித்துச் சென்றதோடு, அவற்றை வேண்டுமானால் காவல்துறையில் புகார் அளித்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அந்த மாது கூறிச் சென்றுள்ளார்.

எந்த நிலையிலும் அந்த மாதையோ வாகன ஓட்டுநரையோ தாங்கள் தரக்குறைவாகப் பேசவில்லை என்பதையும் ஆய்ஸ்யாவின் தாயார் தெரிவித்தார்.

கடப்பிதழை இழந்த பெற்றோர் செய்வதறியாது, சிங்கப்பூர் காவல்துறையை அழைத்துள்ளனர். காவல்துறையினர், வெளியுறவு அமைச்சையும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்தையும் தொடர்புகொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பிறகு பெற்றோர், அருகில் இருந்த ஜோகூர் காவல்துறைக்குச் செல்லும்போது சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் அவர்களைத் தொடர்புகொண்டு, இருவரின் கடப்பிதழ்களும் தங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்தனர்.

மேலும், ஆணையத்தின் அதிகாரிகள் ஜோகூர் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அவர்கள் மீண்டும் சிங்கப்பூர் திரும்ப ஏற்பாடு செய்வதாகக் குறிப்பிட்டனர். பெற்றோர் ஓட்டிய வாடகை வாகனத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

அவர்கள் நாடு திரும்பியதும், காவல்துறையிடமும் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்திடமும் புகார் செய்தனர். திருவாட்டி நோரா, அவசர சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் சென்றார்.

குறிப்புச் சொற்கள்