ஜோகூரில் செலவு செய்வதைச் சிங்கப்பூரர்கள் குறைத்து வருவதாக மலேசியாவின் த ஸ்டார் நாளிதழ் வெளியிட்ட ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் ஆண்டு இறுதியில் நடக்கும் வியாபாரம் குறைந்துள்ளதாக ஜோகூர் வர்த்தகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் வியாபாரம் அதிகமாக இருக்கும், மக்கள் கூட்டமும் பெரிய அளவில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நிலைமை சற்று வித்தியாசமாக உள்ளது என்று ராபின் ஜியான் என்னும் ஜோகூர் வர்த்தகர் குறிப்பிட்டார். தமது வியாபாரம் கிட்டத்தட்ட 30 முதல் 40 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளதாக அவர் கூறினார்.
“வார இறுதி நாள்களிலும் கூட்டம் குறைவாக உள்ளது. கொவிட்-19 காலகட்டத்திற்குப் பிறகு ஆண்டு இறுதி காலக்கட்டத்தில் இப்போதுதான் கூட்டம் குறைவாக உள்ளது,” என்று ஜியான் தெரிவித்தார்.
சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று கூடியுள்ளது. அதனால் சிங்கப்பூர் மக்கள் முன்புபோல் செலவு செய்ய யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் வெள்ளம், மழை உள்ளிட்ட பிரச்சினைகளும் உள்ளதால் மக்கள் ஜோகூர் செல்வதற்குத் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
“ஜோகூரில் பல கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனத்தை நிறுத்துவதற்கும் கடினமாக உள்ளது. இதனாலும் சிங்கப்பூர் வாசிகள் விடுமுறை நாள்களில் ஜோகூர் வருவதைத் தவிர்க்கலாம்,” என்று மற்றொரு வியாபாரி கூறினார்.
தற்போதைய நிலவரப்படி ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 3.19 ரிங்கிட் கிடைக்கிறது. ஆண்டு தொடக்கத்தில் அது 3.30 ரிங்கிட்டாக இருந்தது.

