சிங்கப்பூரின் 2026 பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பில் மாற்றமில்லை

சிங்கப்பூரின் 2026 பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பில் மாற்றமில்லை

2 mins read
0bc6d565-d32e-4bb5-8aff-ecda666da7c5
இவ்வாண்டின் முதல் காலாண்டில், ஒட்டுமொத்த வர்த்தகம், உற்பத்தி, நிதி, காப்பீடு ஆகிய துறைகள் சிறப்பாகச் செயல்பட்டதே பொருளியல் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். - கோப்புப்படம்: த பிஸ்னஸ் டைம்ஸ்

உலகளாவிய அரசியல் பதற்றங்கள், ஈரான் போர் காரணமாகப் பொருளியல் வீழ்ச்சிக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளபோதிலும், சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பில் மாற்றமில்லை.

இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு 2 விழுக்காட்டுக்கும் 4 விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கும் என்று முன்னதாக முன்னுரைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு பொருளியல் சூழல் பலவீனமடைந்திருந்தாலும், நாட்டின் பொருளியல் இவ்வாண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சு கூறியது.

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சிங்கப்பூர் பொருளியல் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 6 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அது, அதற்கு முந்தைய காலாண்டில் பதிவான 5.7 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அதிகம்.  

இவ்வாண்டுக்கான வளர்ச்சி முன்னுரைப்பை சிங்கப்பூர் குறைக்கக்கூடும் என்று நிபுணர்கள் பலர் எதிர்பார்த்திருந்தனர். வளர்ச்சி மெதுவடைந்தால், வேலைவாய்ப்புகள், சம்பள அதிகரிப்பு ஆகியவை பாதிக்கப்படும்.

இந்நிலையில், சென்ற ஆண்டு பதிவான 5 விழுக்காட்டு வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் இவ்வாண்டின் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப முதலீடுகளின் எழுச்சி, உலகளாவிய பகுதி மின்கடத்தி சில்லுகளுக்கான வலுவான தேவை ஆகியவை சிங்கப்பூரின் மின்னணுவியல் மற்றும் உற்பத்தித் துறைகளுக்குத் தொடர்ந்து பக்கபலமாக இருந்து வருவதாக அமைச்சு கூறியுள்ளது.

அமைச்சு வெளியிட்டுள்ள முதல் காலாண்டிற்கான பொருளியல் ஆய்வறிக்கையில், ஒட்டுமொத்த வர்த்தகம், உற்பத்தி, நிதி, காப்பீடு ஆகிய துறைகள் சிறப்பாகச் செயல்பட்டதே பொருளியல் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சிங்கப்பூரின் பொருளியல் சூழலைப் பாதிக்கக்கூடிய இடையூறுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

அதனால், நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும் தேவைப்பட்டால் இவ்வாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தின் முன்னுரைப்பில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்