செயற்கை நுண்ணறிவுத் தேவையால் சிங்கப்பூர் உற்பத்தி 6.1% வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவுத் தேவையால் சிங்கப்பூர் உற்பத்தி 6.1% வளர்ச்சி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Nov 2026 - 9:38 pm

2 mins read

செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்தி சார்ந்த பொருள்களுக்கான தொடர் தேவையால் அக்டோபர் மாதத்தில் சிங்கப்பூரின் உற்பத்தித்துறை விரிவடைந்துள்ளது.

தொழிற்சாலை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 6.1 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக வியாழக்கிழமை (நவம்பர் 26) பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

செப்டம்பரில் இது 3.4 விழுக்காடாகப் பதிவானது. போக்குவரத்துப் பொறியியல், உயிர்மருத்துவ உற்பத்தி ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்துப் பிரிவுகளும் வளர்ச்சி கண்டன.

புளூம்பெர்க் ஆய்வில் பொருளியல் ஆய்வாளர்கள் கணித்த 2.2 விழுக்காட்டைவிட இந்த வளர்ச்சி அதிகமாகும். நிலையற்ற தன்மை கொண்ட உயிர்மருத்துவ உற்பத்தியைத் தவிர்த்தால், அக்டோபர் மாதத்தில் உற்பத்தி 12.1 விழுக்காடு அதிகரித்தது.

துல்லியப் பொறியியல் பிரிவு அதிகபட்சமாக 54.1 விழுக்காடு வளர்ந்தது. இயந்திரங்கள், கட்டமைப்புப் பிரிவில் பகுதி மின்கடத்திச் சாதன உற்பத்தி 62.4 விழுக்காடு உயர்ந்ததே இதற்குக் காரணம். துல்லியக் கூறுகள் உற்பத்தி 16.1 விழுக்காடு கூடியது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தொடர் தேவையால் மின்னணுப் பிரிவு 6.6 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

இதர மின்னணுக் கூறுகள் 26.9 விழுக்காடும் கணினித் துணைச் சாதனங்கள், தரவுச் சேமிப்பு 24.7 விழுக்காடும் பகுதி மின்கடத்திகள் 5.2 விழுக்காடும் தகவல்தொடர்பு, பயனீட்டாளர் மின்னணு 5.3 விழுக்காடும் வளர்ந்தன.

செப்டம்பரில் சுருங்கிய வேதிப்பொருள் பிரிவு 4.4 விழுக்காடு வளர்ந்தது.

தொழில்துறை வாயுக்கள், வேதிப்பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்தி 10.4 விழுக்காடு உயர்ந்தது.

வாசனைப் பொருள்களால் இதர வேதிப்பொருள் பிரிவு 16.6 விழுக்காடு அதிகரித்தது. சுத்திகரிக்கப்பட்ட பொருள்களால் பெட்ரோலியம் 7.8 விழுக்காடு வளர்ந்தது.

மாறாக, தேவைக் குறைவாலும் விநியோகத் தடையாலும் பெட்ரோலிய வேதிப்பொருள் துறை 23.1 விழுக்காடு சரிந்தது.

பால் மாவு, பான உற்பத்தியால் உணவு, பானம், புகையிலைப் பிரிவு 2.1 விழுக்காடு உயர, பொது உற்பத்தித் துறை 0.5 விழுக்காடு வளர்ந்தது. உலோகப் பொருள்கள், அறைகலன் உற்பத்தி குறைந்ததால் இதர பிரிவு 1.3 விழுக்காடு, அச்சுத் துறை 10.2 விழுக்காடு சரிந்தன.

கப்பல் தளச் செயல்பாடுகள், எண்ணெய், எரிவாயுக் கருவி உற்பத்தி குறைந்ததால் கடல்சார் பொறியியல் 25.2 விழுக்காடு சரிந்து, போக்குவரத்துப் பொறியியல் 5.3 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

மாறாக, தரைப் போக்குவரத்து 34.3 விழுக்காடு, விண்வெளித் துறை 0.8 விழுக்காடு வளர்ந்தன. உயிரியல் மருந்துகள் குறைந்ததாலும் மருந்துக் கலவை மாற்றத்தாலும் உயிர்மருத்துவ உற்பத்தி 35.8 விழுக்காடு சரிந்தது.

குறிப்புச் சொற்கள்