சிங்கப்பூரின் 61வது தேசிய தின அணிவகுப்பு இவ்வாண்டு தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது.
10 ஆண்டுகளுக்குப் பின், முதன்முறையாக இங்குத் தேசிய தின அணிவகுப்பு நடக்கவிருக்கிறது.
வியாழக்கிழமை (மே 21) நடைபெற்ற தேசிய தின ஏற்பாடுகளை விவரிக்கும் நிகழ்ச்சியில் இதுகுறித்த பல தகவல்கள் பகிரப்பட்டன.
“தொடுவானம் நோக்கி, முன்னேறட்டும் சிங்கப்பூர்!” என்பது இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பின் கருப்பொருள்.
தேசிய விளையாட்டரங்கில் 42,000 பேர் அமரக்கூடிய இடவசதி உள்ளது. மேலும், ‘காலாங் பேசின்’இல் முதன்முறையாக, அதிபருக்கான மரியாதை பீரங்கி குண்டு முழக்கம் நடைபெறும்.
வழக்கம்போல் ஹெலிகாப்டர் தேசிய கொடியை ஏந்திச்செல்வதை இம்முறையும் காணலாம்.
வான்வழி சாகசங்கள், உள்ளரங்கு ஆளில்லா வானூர்தி ஒளிக்காட்சி உள்ளிட்ட சிறப்பு அங்கங்கள் இடம்பெறவிருக்கின்றன.
இயக்குநர் கே. ராஜகோபாலின் இயக்கத்தில் இமான் ஃபான்டி, யங் ராஜா இடம்பெற்றுள்ள ‘ஹார்ட்பீட்ஸ்’ என்ற ஆறு பகுதிகள் கொண்ட காணொளியும் ஒளிபரப்பப்படவிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள மூன்று புதிய பாடல்களும் அணிவகுப்பில் ஒளிபரப்பப்படும்.
இந்நிலையில், பாதுகாப்பு, செயல்பாட்டுக் காரணங்களால் ‘ரெட் லயன்ஸ்’ வீரர்களின் வான்குடை சாகசங்கள், ஒருங்கிணைந்த வாகன அணிவகுப்பு ஆகியவை இம்முறை தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறமாட்டா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 9 வரை காலாங் பகுதியில் நேரடி இசை, ஒளிக்காட்சிகள் இடம்பெறும்.
அவற்றுடன் ‘காலாங் பேசின்’ பகுதியில் பொதுமக்கள் வாணவேடிக்கைகளையும் காணலாம்.

