சிங்கப்பூர் செல்வந்தர்கள் நாட்டின் பிரதான வட்டாரங்களில் பெரிய வீடுகளை வாங்குகிறார்கள். இப்போது $5 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள விலையில் வீடுகளின் பெரும்பகுதியை அவர்கள்தான் வாங்குகிறார்கள்.
அதிக முத்திரை வரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், சொகுசு வீட்டுச் சந்தையில் ஒரு பகுதியைத்தான் வகிக்கிறார்கள்.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் (யுஆர்ஏ) அண்மைய சந்தை அறிக்கைகளும் தரவுகளும் இந்த மாற்றத்தை சுட்டிக் காட்டுகின்றன.
இந்த உள்நாட்டு வாடிக்கையாளர்களின் ஆதிக்க போக்கு, 2026ஆம் ஆண்டில் சொகுசு மற்றும் அதிசொகுசு வீடுகளின் அடுத்த வாங்கும் அலையை வடிவமைக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரை, மத்தியப் பகுதியில் 171 தரை வீடுகள் மற்றும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாடி வீடுகள் குறைந்தது $5 மில்லியனுக்கு கைமாறின. அதில் 130 வாடிக்கையாளர்கள் சிங்கப்பூரர்கள் என்று ரியலியன் குழுமத்தின் உறுப்பினரான ஆரஞ்சுடீயின் சொகுசு குடியிருப்புச் சந்தை அறிக்கை குறிப்பிட்டது.
நாட்டின் மத்திய பகுதியில் சொகுசு வீடுகளின் விற்பனை முந்தைய காலாண்டை விட 20 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் சொகுசு தரை வீடுகள் மற்றும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாடிகளைக் கொண்ட வீடுகளை வாங்கும் சிங்கப்பூரர்களின் விகிதம் 70 விழுக்காட்டிலிருந்து மூன்றாம் காலாண்டில் 76 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் ஆரஞ்சு டீயின் அறிக்கை குறிப்பிட்டது இது 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 72.5 விழுக்காடாக இருந்ததைவிட அதிகமாகும்.
“உள்ளூரில் நிலவும் வலுவான தேவை, சிங்கப்பூரர்களிடையே வளர்ந்து வரும் செல்வச் செழிப்பையும், நீண்ட கால முதலீட்டுச் சொத்துகளாகவும் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகவும் உயர்தர சொத்துகளைப் பெறுவதில் அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும் பிரதிபலிக்கிறது,” என்று ஆரஞ்சு டீ -ரியலியன் குழுமத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் திருவாட்டி கிறிஸ்டின் சன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், சொகுசு வீடு வாங்கும் வெளிநாட்டவரின் ஆர்வம் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை.
ஒன் மெரினா கார்டன்சில் ஒரு சொகுசு வீட்டைக் கம்போடிய வாடிக்கையாளர் ஒருவர் சுமார் $5.1 மில்லியன் செலுத்தி வாங்கியதை ஹட்டன்ஸ் ஏஷியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப் சுட்டிக்காட்டினார். சிங்கப்பூரின் பாதுகாப்பான புகலிட நிலை மற்றும் வலுவான நாணயம் ஆகியவற்றின் காரணமாக சில வெளிநாட்டினர் இன்னும் 60 விழுக்காட்டு கூடுதல் முத்திரை வரி செலுத்தத் தயாராக உள்ளனர் என்று அவர் கூறினார்.

