சிங்கப்பூரில் 9.9 விற்பனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உள்ளிட்ட விழா காலங்களில் இணைய விற்பனை சூடுபிடிக்கும். 9.9 விற்பனை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) தொடங்கவுள்ளது.
இந்த விழாக் காலங்களில் மக்கள் அதிக அளவில் பொருள்களை வாங்குவார்கள். இதனால் இந்தக் காலகட்டத்தில் மட்டும் பொட்டலங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60 விழுக்காடு கூடும்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்போஸ்ட் தயார் நிலையில் உள்ளது. வாடிக்கையாளர்களுக்குச் சரியான நேரத்தில் பொருள்களுள்ள பொட்டலங்களை எடுத்துச் செல்லச் சிங்போஸ்ட் அதன் தளவாடக் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு இறுதிவரை சிங்கபோஸ்ட் அதன் விநியோக வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது.
மேலும் பொட்டலக் கிடங்குகள் வாரத்தில் அனைத்து நாள்களும் செயல்படும். தற்போது அது வாரத்தில் ஆறு நாள்கள் மட்டுமே செயல்படுகிறது.
அதேபோல் விநியோக ஊழியர்கள் எண்ணிக்கையையும் சிங்கபோஸ்ட் கூட்டியுள்ளது. புதிதாக 100 முழு நேர விநியோக ஊழியர்களைப் பணியமர்த்த சிங்கபோஸ்ட் திட்டமிட்டுள்ளது.
இதனால் கிட்டத்தட்ட 800 விநியோக ஊழியர்கள் பொட்டலங்களைச் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
இணைய விற்பனைக்கான உச்சக் காலங்களில் தளவாட நிறுவனங்கள் பலவிதத்தில் தடுமாறும். திடீரென அதிக அளவில் பொட்டலங்களை விற்பனையாளர்கள் அனுப்புவார்கள். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து பொட்டலங்கள் குவியும். அதைச் சமாளிக்கத் தற்போது தயாராக உள்ளோம்,” என்றார் சிங்போஸ்ட் குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி நியோ சு யின்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், திங்கட்கிழமை (செப்டம்பர் 8) முதல் 8 கனரக வாகனங்களை விநியோக நடவடிக்கையில் ஈடுபடுத்தும். இதற்குமுன் அது 6 வாகனங்களைப் பயன்படுத்தியது.