சேவைத் தடை தொடர்பில் சிங்டெல்லுக்கு 1 மில்லியன் வெள்ளி அபராதம்

2 mins read
857665f6-17b4-487b-96ab-d7de9e76d2f5
பொதுமக்களின் பாதுகாப்பு மீதான பாதிப்பு மிகவும் கடுமையாக இருந்திருக்கலாம் என்று தகவல், ஊடக மேம்பாட்டு ஆணையம் வியாழக்கிழமை (டிசம்பர் 11) தெரிவித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிலத்தொடர்பு தொலைபேசி சேவைத் தடை குறித்து ‘சிங்டெல்’ நிறுவனத்தின் மீது ஒரு மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2024 அக்டோபர் 8ல் நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடித்த சேவைத் தடை, 500,000 பயனாளர்களைப் பாதித்தது.

அரசாங்க அமைப்புகள், சுகாதார அமைப்புகள், வங்கிகள் ஆகியவற்றில் சிலவற்றுக்கும் 995, 999 அவசர எண்களுக்கும் செய்யப்பட்ட அழைப்புகள் துண்டிக்கப்பட்டன.

பொதுமக்களின் பாதுகாப்பு மீதான பாதிப்பு மிகவும் கடுமையாக இருந்திருக்கலாம் என்று தகவல், ஊடக மேம்பாட்டு ஆணையம் வியாழக்கிழமை (டிசம்பர் 11) தெரிவித்தது.

சேவைத் தடையின் அளவு, தடையின் பாதிப்பு, தடையைச் சரிசெய்வதற்கு எடுக்கப்பட்ட நேரம் ஆகியவை, தண்டனை உறுதிசெய்யப்பட்டபோது கருத்தில் கொள்ளப்பட்டது.

இந்தத் தண்டனையை நிறுவனம் ஏற்பதாக சிங்டெல் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி இங் தியென் சோங் தெரிவித்தார்.

“கடந்த அக்டோபரில் ஏற்பட்டுள்ள சேவைத்தடையின் கடுமையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதனால் நம் வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சேவைத்தடைக்காகவும் வசதியின்மைக்காகவும் நான் மீண்டும் எனது வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்,” என்று திரு இங் கூறினார்.

இரு வெவ்வேறு ‘ஃபயர்வால்’ எனப்படும் மெய்நிகர் வலையமைப்பு அரண்களை சிங்டெல் கொண்டிருந்ததாக ஆணையத்தின் விசாரணை வழி தெரிய வந்தது. 

2024 அக்டோபர் 8ல் கண்காணிப்புக் கட்டமைப்பில் நடவடிக்கை மேலும் அதிகமானபோது எல்லாக் கட்டமைப்புகளுக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட வன்பொருள் நினைவகத்தால் அதனைச் சமாளிக்க இயலவில்லை.

மிகவும் கடுமையான அளவில் பெருகிவந்த நடவடிக்கைகளைச் சமாளிக்கத் தேவைப்படும் பாதுகாப்பு அந்த வன்பொருளுக்கு இல்லாத நிலையில் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.

இந்தச் சம்பவம் முற்றிலும் சிங்டெல்லின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாகவும் இது இணையத் தாக்குதலால் நடந்ததல்ல என்றும் ஆணையம் கூறியது. இந்த முடிவுகள், சுயேச்சை ஆலோசகர்களின் மதிப்பீடுகளுடன் உடன்படுகின்றன.

இதன் தொடர்பான தேவையான மறுசீரமைப்புப் பணிகளைத் தொலைத்தொடர்பு நிறுவனம் எடுத்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்தது. 

குரலுக்கான கட்டமைப்புக்கும் கண்காணிப்புக்கான கட்டமைப்புக்கும் தனித்தனி வன்பொருள்களை வைத்திருக்கவும் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் மற்ற சில நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஆணையம் கூறியது. 

மேலும், இந்தப் பிரச்சினை குறித்து வாடிக்கையாளர்களுடன் நிறுவனம் தொடர்பில் இருந்துவருவதாகத் திரு இங் கூறினார்.

“எங்கள் தொடர்புக் கட்டமைப்பின் நம்பகத்தன்மைக்கும் மீள்திறனுக்கும் நாங்கள் முதன்மை தருகிறோம். எங்கள் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று திரு இங் கூறினார்.

சிங்டெல் போன்ற முக்கியமான தொலைத்தொடர்பு  பெருநிறுவனங்களுக்கு நம்பகத்தன்மையைப் பொறுத்தளவில் உயர்வான தரநிலையைக் கொண்டிருப்பதாக ஆணையம் தெரிவித்தது.

மீள்திறன்மிக்க கட்டமைப்புகளைத் திட்டமிட்டு, வடிவமைத்து செயல்படுத்த இந்தச் சேவை நடத்துநர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்