தங்களுடைய சொந்த வங்கிக் கணக்குகளை குற்றக் கும்பலிடம் ஒப்படைத்ததாக ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்படவிருக்கிறது.
அவர்கள், அதற்காக மாதா மாதம் பணம் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
அறுவர் மீதும் திங்கட்கிழமை (நவம்பர் 4) குற்றஞ்சாட்டப்படும். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் வழியாக ஏறக்குறைய எட்டு மில்லியன் வெள்ளியை வேறு கணக்குகளுக்கு மாற்ற பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2023 மார்ச் மாதத்திலிருந்து கைப்பேசியில் ஊடுருவி பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கி லிருந்து அடையாளம் காண முடியாத பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக காவல்துறைக்குப் புகார் வந்தது.
2022 ஜூலை முதல் 2023 மே வரை நடந்த விசாரணையில் இவர்கள் ஆறு பேரும் வங்கிக் கணக்குகளைத் திறந்திருப்பது தெரிந்தது. பின்னர் வங்கிக் கணக்கு விவரங்களை குற்றக் கும்பலிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
ஆறு பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் எனத் தெரிகிறது. ஏமாற்றுவதற்கு உடந்தையாக இருந்தது, கணினி சாதனங்களில் நுழைய அனுமதித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.
நான்கு பேர், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது.

