அர்ட்மோர் பார்க், லியோனி ஹில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஆறு முற்றுரிமை அடுக்குமாடி சொகுசு வீடுகள் மூன்று பில்லியன் வெள்ளி கள்ளப்பண விவகாரத்துடன் தொடர்புடையவை.
அந்த வீடுகள் இப்போது ஏலத்துக்கு விடப்பட்டுள்ளன.
அவ்வீடுகளில் ஐந்து ஆர்ச்சர்ட் சாலைக்கு அருகே உள்ள நூவெல் 18 திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. நான்கு படுக்கையறைகளைக் கொண்டுள்ள மற்றொரு வீடு லியோனி ஹில் சாலையில் உள்ள நியூ ஃபியூச்சுரா திட்டத்தில் இருக்கிறது.
இம்மாதம் ஏலம்
இந்த வீடுகள் அனைத்தும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஏலத்துக்கு வருகின்றன. அந்த ஏல நடவடிக்கை எஸ்ஆர்ஐ நிறுவனத்தின் வர்த்தக அலுவலகத்தில் நடைபெறும். அந்நிறுவனம், ஏல நடவடிக்கையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்த ஆறு வீடுகளையும் சேர்த்து கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மூன்று பில்லியன் வெள்ளி கள்ளப்பண விவகாரத்துடன் தொடர்புடைய மொத்தம் 32 சொத்துகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
80க்கும் மேற்பட்ட சொத்துகள் ஏலத்தில்
சிங்கப்பூரின் ஆகப்பெரிய கள்ளப்பண விவகாரத்தில் பறிமுதல் செய்யப்ட்ட சொத்துகளை நிர்வகித்துப் பணமாக்க டிலோய்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்திட்டத்தின்படி 80க்கும் அதிகமான சொத்துகள் ஏலத்துக்கு விடப்படவுள்ளன.
செப்டம்பர் 17, 23ஆம் தேதிகளில் ஏலப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 26 சொத்துகளில் நான்கு அடுக்குமாடி சொகுசு வீடுகள் மட்டுமே விற்கப்பட்டன. அவை வாலிக் ரெசிடென்ஸ், மார்ட்டின் மோடர்ன் ஆகிய திட்டங்களில் அமைந்துள்ள மொத்தம் 16.28 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சொத்துகளாகும்.
நூவெல் 18 திட்டத்தில் ஏலத்துக்கு விடப்படும் ஐந்து வீடுகள் ஒவ்வொன்றின் பரப்பளவும் 1,335லிருந்து 6,125 சதுர அடிகளாகும். ஒரு வீட்டின் விலை ஒரு சதுர அடிக்கு $2,938லிருந்து $3,558 வரையிலான விலையில் தொடங்குகிறது.
ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள நூவெல் 18ஐச் சுற்றி பல கல்வி நிலையங்களும் பிற நாட்டுத் தூதரகங்களும் அமைந்துள்ளன.
நியூ ஃபியூச்சுரா திட்டத்தில் அமைந்துள்ள ஆறாவது வீடு 2,691 சதுர அடிகளைக் கொண்டுள்ளது. அதன் விலை ஏறத்தாழ 9.8 மில்லியன் வெள்ளியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நியூ ஃபியூச்சுரா திட்டம், சோமர்செட் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே அமைந்துள்ளது.
