ஆறு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்து; அறுவர் காயம்

1 mins read
aa73fce2-e0d8-4169-82e4-14210a251fdc
நவம்பர் 26ஆம் தேதி நடந்த விபத்தில் ஐந்து கார்களும் வேன் ஒன்றும் மோதின. - படம்: SINGAPORE ROADS ACCIDENT.COM/ஃபேஸ்புக்

தீவு விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) காலை ஆறு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாயின. இச்சம்பவத்தில் அறுவர் காயமடைந்தனர்.

துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில், ஜாலான் பஹார் வெளிச்சாலைக்கு முன்பு நடந்த இவ்விபத்து குறித்து தங்களுக்கு நவம்பர் 26ஆம் தேதி காலை 7.15 மணியளவில் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர் காவல் துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

மேலும், இவ்விபத்தில் ஐந்து கார்களும் வேன் ஒன்றும் ஒன்றோடொன்று மோதின.

6 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து வேன் பயணிகளும் 53 வயது கார் ஓட்டுநரும் காயமடைந்ததாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சுயநினைவுடன் இருந்ததாகவும் காவல்துறை கூறியது.

காயமடைந்தவர்களில் ஐவர் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கும் ஒருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்லப்பட்டனர்.

ஃபேஸ்புக்கில் வெளியான விபத்து குறித்த காணொளியில், தீவு விரைவுச்சாலையின் இடதுபுறப் பாதையில் ஆறு வாகனங்கள் நின்றிருப்பதையும் அவற்றின் அருகே சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர உதவி வாகனம் இருப்பதையும் காண முடிந்தது.

இவ்விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்