செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளில் கடுமையான வீழ்ச்சியும் அதன் விநியோகத் தொடரில் வருவாய் இழப்பும் ஏற்பட்டால் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 32 விழுக்காட்டு நிறுவனங்கள் பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
அதாவது, இங்குள்ள நிறுவனங்களில் மூன்றில் ஒன்று பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அது தனது மதிப்பாய்வில் குறிப்பிட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் மொத்த நிறுவனக் கடனில் ஏறத்தாழ 16 விழுக்காட்டைக் கொண்டுள்ளன.
அதிகக் கடன் சுமையுடைய நிறுவனங்கள், அதிக முதலீடு தேவைப்படும் தொழில் நிறுவனங்கள் மற்றும் நடைமுறை மூலதன நிதியுதவியை நம்பியிருக்கும் நிறுவனங்களே அதிகமாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
சிறு நிறுவனங்களின் லாப விகிதம் குறைவாகவும் போதிய பண இருப்பு இல்லாததாலும் அவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) வெளியிட்ட வருடாந்தர ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை, 30 விழுக்காடு வரையிலான வருவாய் இழப்பு, 400 அடிப்படைப் புள்ளிகள் வரையிலான வட்டி விகித அதிகரிப்பு ஆகிய பாதிப்புகளுக்கு உட்படுத்தி ஆய்வு நடத்தப்பட்டது.
ஒரு நிறுவனத்தின் வட்டி ஈட்டுத்தொகை விகிதம் 1ஐவிடக் குறைவாக இருந்தாலோ அல்லது அதன் பணப்புழக்கம் எதிர்மறையாக இருந்து, வரும் இழப்பை எதிர்கொள்ள ஆறு மாதங்களுக்கும் குறைவான பண இருப்பு மட்டுமே இருந்தாலோ, அது ஆபத்தான நிலையில் உள்ள நிறுவனம் என்று ஆணையம் வரையறுக்கிறது.
இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வருவாய் மற்றும் ரொக்கக் கையிருப்பு உதவியுடன் அதுபோன்ற நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் இருப்பதாகவும் பெருநிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் வலுவாக இருப்பதாகவும் ஆணையம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவு சார்ந்த சொத்து மதிப்புகளின் மறுமதிப்பீடு ஒரு முக்கிய ஆபத்துக் காரணியாக மாறக்கூடும் என்றும் அது குறிப்பிட்டது.
செயற்கை நுண்ணறிவு முதலீடுகள், நிதி சார்ந்த அபாயங்கள், தொடர்ச்சியான விநியோகத் தொடர் பாதிப்புகள் ஆகியவற்றின் காரணமாக மூலதனச் செலவு தொடர்ந்து அதிகமாக இருக்கும். எனவே, உலகளாவிய நிதி மீள்திறன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
