புகைமூட்டப் பிரச்சினை: அதிகாரிகளுடன் ஒத்துழைக்க முன்வந்த நிறுவனம்

புகைமூட்டப் பிரச்சினை: அதிகாரிகளுடன் ஒத்துழைக்க முன்வந்த நிறுவனம்

படம்: சாவ்பாவ்

20 Oct 2026 - 5:51 pm

2 mins read

புகைமூட்டப் பிரச்சினையின் தொடர்பில் அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கப் பனை எண்ணெய் உற்பத்தியாளரான ‘ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ்’ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

சிங்கப்பூரில் நிலவும் தற்போதைய புகைமூட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக அனைத்துச் சட்ட, ஒழுங்குமுறை நடவடிக்கைகளையும் எடுக்க உத்தேசித்துள்ளதாகச் சிங்கப்பூர் அண்மையில் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து ‘ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ்’ நிறுவனத்தின் உத்தரவாதம் வந்துள்ளது.

சிங்கப்பூர்ப் பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள அந்த நிறுவனம், இந்த விவகாரம் குறித்துச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) அறிக்கையொன்றை வெளியிட்டது.

தற்போதைய புகைமூட்ட நிலவரம் பற்றிய ஆதாரங்களின் அடிப்படையில் முழுமையான ஆய்வு நடத்தப்படுவதை வரவேற்பதாக அது தெரிவித்தது. மேலும், தனது செயல்பாடுகள் அனைத்திலும் ‘எரிப்புத் தடை’க் கொள்கையை நீண்டகாலமாய்ப் பின்பற்றி, நடைமுறைப்படுத்தி வருவதை நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

கிடைக்கக்கூடிய ஆதாரங்களை ஆக்ககரமான முறையில் ஆய்வு செய்தால், நேரடியாகவோ மறைமுகமாகவோ நெருப்பைப் பயன்படுத்தி நிலப்பகுதிகளைத் தாங்கள் சீரமைக்கவில்லை என்பது தெரியவரும் என்று அது நம்பிக்கை தெரிவித்தது.

தீ எங்குத் தொடங்கியது என்பதை மதிப்பிடுவது, சரிபார்க்கப்பட்ட தகவல்கள், அறிவியல் ஆதாரங்கள், கள நிலவரம் பற்றிய முழுமையான புரிதலின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்று ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ் கூறியது.

சிங்கப்பூரில் 6 பில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கொண்ட இந்தக் குழுமம், சூழ்நிலையின் துல்லியத்தை விவரிப்பதற்கு ஆவண, தொழில்நுட்ப ஆய்வுகளையும் தேவைப்பட்டால் கள ஆய்வுகளையும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், தீத்தடுப்பு, நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகள், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், சமூக அமைப்புகள், துறைசார்ந்த மற்றத் தரப்புகளிடமிருந்து வரும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை ஏற்கத் தயாராய் இருப்பதாகவும் ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ் தெரிவித்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த நிறுவனங்களுக்குக் கூடுதல் நெருக்குதல்

இந்தோனீசியா முழுதும் தீ தொடர்ந்து எரிந்து, சிங்கப்பூருக்குப் புகைமூட்டத்தை அனுப்பிவரும் நிலையில், தோட்ட நிறுவனங்கள் அவற்றின் நிலப்பகுதிகளில் எரியும் தீயைக் கட்டுப்படுத்தவும் அணைக்கவும் இங்குள்ள அதிகாரிகள் கூடுதல் நெருக்குதலைக் கொடுத்து வருகின்றனர்.

சிங்கப்பூரின் எல்லை தாண்டிய புகைமூட்டத் தடுப்புச் சட்டத்தின்கீழ், இந்தோனீசியாவில் உள்ள 10 நிறுவனங்களுக்குத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு சட்டபூர்வ அறிவிப்புகளை அனுப்பியுள்ளது. நிலப்பகுதிகளில் எரிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவை மீண்டும் நிகழாமல் எவ்வாறு தடுக்கத் திட்டமிட்டுள்ளன என்பது குறித்த திட்டங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புகைமூட்டத்தை உருவாக்கும் பெரும்பாலான நிலப்பகுதிகள் அமைந்துள்ள தென்சுமத்ரா, கலிமந்தான் வட்டாரங்களில் இந்த 10 நிறுவனங்களின் தோட்டங்களும் அமைந்துள்ளன.

பூமி அண்டலாஸ் பெர்மாய், பூமி மெக்கார் ஹிஜாவ், செபாங்கூன் பூமி அண்டலாஸ் மரத் தொழில்துறை, புவனா மெகாதமா ஜெயா, பரதமா புத்ரா பெர்காசா, பரமித்ரா முலியா லாங்கெங், சுமத்ரா அலாம் அனுகெரா, ஹுத்தான் லெஸ்தாரி ராயா, பங்கனேசியா, மணஞ்சுங் ஹயாக் ஆகியவையே அந்த நிறுவனங்கள்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்புகைமூட்டம்இந்தோனீசியாஒத்துழைப்புநடவடிக்கைஎச்சரிக்கை