நிலையற்ற எதிர்கால வேலையிடத்தில் வெற்றிபெற செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தொழில்நுட்பத் திறன்களைவிட மென்திறன்களே ஆக முக்கியத்துவம் வாய்ந்தவையென சிங்கப்பூர் இளையர்கள் கருதுகின்றனர்.
மேலும், அவர்களில் பெரும்பாலோர் நிதிசார்ந்த, துறைசார்ந்த திட்டமிடலில் உதவி நாடுகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் ‘பிளேக்பாக்ஸ் ரிசர்ச்’ 1,000 இளையர்களிடையே நடத்திய இணையவழி ஆய்வின் முடிவுகளே இவை.
இந்த ஆய்விற்கு தேசிய இளையர் மன்றம், கேபிஎம்ஜி, சிங்கப்பூர் மக்கள் தொடர்புக் கழகம் ஆகிய மூன்றும் ஏற்பாடுசெய்தன.
அம்மூன்று அமைப்புகளும் இணைந்து ஜூன் மாதம் தொடங்கிய ‘ஜென்2050’ இளையர் செயல்திட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆய்வு முடிவுகள் பகிரப்பட்டன.
ஆய்வின் முடிவுகள், எதிர்காலத் தேவைகள் குறித்த அரசாங்கக் கொள்கைகளுக்கு இணங்கும் வகையில் இருப்பதாகக் கூறினார் நிகழ்ச்சிக்கு வருகையளித்த கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
சிங்கப்பூர்ப் பொருளியல் சிறந்த நிலையில் இருந்தாலும் உலகச் சூழல் நிலையற்றதாகிவரும் நிலையில், நாம் நம்மை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“இன்று வாய்ப்புகள் அனைத்துலக அளவில் அதிகமாக உள்ளன. ஆனால் மற்ற நாடுகளில் இருப்போர் நம் அளவிற்கு, அல்லது நம்மைவிட இன்னும் வெற்றிக்கான பசியுடன் இருக்கின்றனர். சிங்கப்பூர் சந்தை வெகு சிறிது. அனைத்துலகச் சந்தையில் என்ன போட்டித்தன்மை உள்ளது என்பதை இளையர்கள் அறிந்துகொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அதே சமயம், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதும், அன்றாடம் ஒரே நடைமுறையிலான நிர்வாக வேலைகளை ‘ஏஐ’க்குப் பறிகொடுக்கக்கூடும் என்பதால் வேறு வேலைகளை நாடுவதும் முக்கியம் என்றார் அவர்.
“அதற்கென, ஒரு குறிப்பிட்ட துறையில் அனைத்து வேலைகளும் பறிபோகும் என்றில்லை. கடந்த 20 ஆண்டுகளாகச் செய்தித்தாள் மறைந்துவிடும் எனச் சொல்லிவருகிறோம்; ஆனால் செய்தித்தாள்கள் இன்னும் இங்கிருக்கின்றன. அச்சுவடிவைவிட மின்னிலக்கப் பயன்பாட்டு விகிதம் அதிகரிக்கக்கூடும். ஆனால் செய்தியாளர் பணி தொடரும்,” என்றார் திரு தினேஷ்.
“ஆய்வு முடிவுகள் ஆச்சரியமளித்தன. ஏஐ, நீடித்த நிலைத்தன்மை போன்றவற்றை வாழ்வின் ஒன்றிய பகுதியாகக் காண்பதால் தங்களைத் தனித்துவப்படுத்திக்கொள்ள இளையர்கள் விரும்புவதாக நினைக்கிறேன்,” என்றார் கேபிஎம்ஜி நிர்வாகப் பங்காளி லீ ச யெங்.
‘ஜென்2050’ திட்டத்தில் பங்கேற்கும் துரை மாணிக்கம் நிஷாந்த், 21, மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டத்தை வடிவமைத்து வருகிறார்.
ஆனால், தமது திட்டம் கைகூடுவதற்குத் தொடர்புத் திறன்கள், முதலீடு தேடுவது, மீள்திறன் போன்ற திறன்கள் முக்கியம் என்றார்.
“நீங்கள் உங்களையே விற்கமுடிந்தால்தான் உங்கள் இலக்கை எட்டுவீர்கள்,” என்றார். அதே சமயம், ‘ஏஐ’யின் பரவலைக் கருதி, நம் ஆற்றலுக்கும் ‘ஏஐ’யின் ஆற்றலுக்கும் இடையே சமநிலைக் காண வேண்டும் என்றார் அவர்.
திட்டத்தின் மற்றொரு பங்கேற்பாளரான நூர்ஹான், 28, நீடித்த நிலைத்தன்மைமிக்கத் தீர்வுகளைத் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையே பகிர வழிவகுக்கும் பாலமாகத் திகழ்ந்து வருகிறார்.
மெர்சிடிஸ்-பென்ஸ் வல்லுநர் திட்டம்வழி ‘சிசிஎஸ்இஏ’ (https://coolcities-sea.com/) நிறுவனத்தைத் தொடங்கிய அவர், தற்போது அதை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு திட்டத்தையும் செயல்படுத்த விரும்புகிறார்.
“நெடுங்கால ஆதரவு வழங்கும் தளங்களை இளையர்கள் நாடவேண்டும்,” என்று நூர்ஹான் கேட்டுக்கொண்டுள்ளார்.
மென்திறன்களைவிட தொழில்நுட்பத் திறன்களைக் கற்பது இன்னும் எளிது என்கிறார் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி முன்னாள் மாணவர் இஷ்ராஃப்.
“எதிர்காலத்தில், சூழலுக்கேற்ப மாறுவதே இளையர்களுக்குத் தேவைப்படும் அதிமுக்கியத் திறன்,” என்றனர் அவரது ‘புரோஜெக் லூமினா’ குழுவினர் ஸ்கோட், ஸ்கை. அத்திட்டத்திற்காக, இளம் எஸ்டிஜி தலைமைத்துவ விருதுக்கு அவர்கள் இறுதிச் சுற்றுக்குச் சென்றிருந்தனர்.

