கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற கல்வித் திறன் பாடப் பிரிவுகளைத் தங்களது நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டங்களிலிருந்து சில பள்ளிகள் கைவிடுகின்றன.
சிஎச்ஐஜே செயின்ட் நிக்கலஸ் பெண்கள் பள்ளி 2026ஆம் ஆண்டுக்கான நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்திலிருந்து அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) ஆகியவற்றை வழங்குவதை நிறுத்தியுள்ளது.
அதே ஆண்டில், சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி இருமொழித் திறன், ஸ்டெம் ஆகிய பாடப் பிரிவுகளை நீக்கியபோதிலும், ஆங்கில மொழி, மானுடவியல் பாடப் பிரிவுகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி தனது ஒருங்கிணைந்த திட்டத்தின் முதலாம் ஆண்டுக்கான 2027ஆம் ஆண்டு நேரடிப் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்திலிருந்து ஆங்கில மொழி, கணிதம், அறிவியல் பாடப் பிரிவுகளை நீக்கவுள்ளது.
இதற்கிடையே, மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி 2027ஆம் ஆண்டுக்கான சேர்க்கைத் திட்டத்திலிருந்து ஆங்கில மொழி, ஸ்டெம் பாடப் பிரிவுகளை நிறுத்தவுள்ளது. 2026ஆம் ஆண்டில் கணக்கீட்டுச் சிந்தனைத் திறனை ஒரு திறன் பிரிவாக அப்பள்ளி அறிமுகப்படுத்தியிருந்தது.
தனது உத்திபூர்வ முன்னுரிமைகள், கிடைக்கப்பெறும் வளங்கள், தனித்துவமான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பள்ளி அந்த மாற்றங்களைச் செய்ததாக மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியின் துணை முதல்வர் ரைட் யி நா, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
“வழக்கமான கல்வி மதிப்பீட்டு முறைகளின் மூலம் பொதுவாகக் கண்டறியப்படாத பாடப் பிரிவுகளில் உள்ள பன்முகத் திறன்களை அங்கீகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக, நேரடிப் பள்ளிச் சேர்க்கையின்கீழ் உள்ள நமது திறன் பிரிவுகளை நாங்கள் மாற்றியமைத்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
விரிவான ஸ்டெம் பிரிவின்கீழ் வரும் குறிப்பிட்ட திறன்களை உள்ளடக்கும் தொகுப்பான கணக்கீட்டுச் சிந்தனைத் திறனை, இன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும், மிகப் பொருத்தமான ஒரு திறன் தொகுப்பாகப் பள்ளி கருதுகிறது என்றும் திருவாட்டி ரைட் குறிப்பிட்டார்.
