மறைந்தும் மூவருக்கு வாழ்வளித்த மகன்: காகித விண்மீன்களால் அஞ்சலி செலுத்திய தாய்

மறைந்தும் மூவருக்கு வாழ்வளித்த மகன்: காகித விண்மீன்களால் அஞ்சலி செலுத்திய தாய்

2 mins read
10462031-55bb-41a0-9508-013a02eccddf
உறுப்பு தானம் செய்ததால் இறந்தும் மூவருக்கு மறுவாழ்வு அளித்த நேதனியேல் ஸக்கரியா டான் - படம்: குயினி டான் ஃபேஸ்புக்
Google News Preferred Icon

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 27 வயதில் அரிதான மூளை நோயால் பாதிக்கப்பட்டு காலமான நேதனியேல் ஸக்கரியா டான் என்ற இளையர், தனது உறுப்பு தானத்தின் மூலம் மூன்று நபர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

மகன் மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவரது உறுப்பு தானத்தால் பயனடைந்தவர்களின் விவரங்கள் அடங்கிய “மனமார்ந்த நன்றி” கடிதத்தை தேசிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவிடமிருந்து பெற்றதாக அவரது தாயார் குயினி டான்  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புது வாழ்வு பெற்ற மூன்று பேர்

நேதனியேல் உயிரிழப்பதற்கு முன், தனது உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாகத் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தப் பெண்ணிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி தானம் செய்யப்பட்ட அவரது கல்லீரல், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 64 வயது முதியவருக்குப் பொருத்தப்பட்டு, அவரது குடும்பத்திற்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

அவரது சிறுநீரகங்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்குப் பொருத்தப்பட்டன. 

இதில் 52 வயது பெண்மணி கடந்த 3 ஆண்டுகளாகவும், 35 வயது பெண்மணி கடந்த 10 ஆண்டுகளாகவும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்தவர்கள். அவர்கள் தற்போது தங்களது குடும்பத்தினருடன் ஆரோக்கியமாக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.

மேலும், அவரது இடுப்பு இரத்த நாளங்கள் எதிர்கால கல்லீரல் அறுவை சிகிச்சைகளுக்காகப் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுள்ளன.

தாயின் புகழஞ்சலி

“யாரோ ஒருவருக்கு மறுவாழ்வு கிடைக்கப் போகிறது என்பதைத் தாண்டி, யார் பயனடைவார்கள் என்று நான் யோசித்ததில்லை. ஆனால் இந்த கடிதத்தைப் படித்த பிறகே, என் மகனின் ஒரு பகுதி இன்னமும் வாழ்கிறது என்பதை உணர்ந்தேன். 

‘‘ஓராண்டுக்குப் பிறகும் அவனை நினைவுகூர்ந்து கடிதம் அனுப்பியது எனக்குப் பெரிய ஆறுதல்,” என்றார் திருவாட்டி குயினி.

அமைப்பு வழங்கிய சான்றிதழ், பதக்கம் பள்ளி மாணவர்கள் காகிதத்தில் மடித்த விண்மீன்கள் அடங்கிய பாட்டிலை, உட்லண்ட்ஸ் மெமோரியலில் உள்ள மகனின் நினைவிடத்தில் சமர்ப்பித்தார் அந்தத் தாயார். 

அதில் நேதனியேலின் வயதைக் குறிக்கும் வகையில் 27 காகித விண்மீன்களை எடுத்து வைத்து அவர் தனது அஞ்சலியைச் செலுத்தினார்.

குறிப்புச் சொற்கள்