சிங்கப்பூரின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை எடுத்துக்கூறும் தேசியக் கண்காட்சியை ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் பிரதமர் லாரன்ஸ் வோங் திறந்துவைத்துள்ளார்.
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக விளங்கும் எஸ்ஜி60 ஹார்ட் அண்ட் சோல் எக்ஸ்பீரியன்ஸ் (SG60 Heart&Soul Experience) என்ற கண்காட்சிக்குத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் தேசிய நூலக வாரியமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
கண்காட்சியின் முதல் வாரத்திற்கான பார்வையாளர் இடங்களில் 90க்கும் அதிகமானவை முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
ஒவ்வொரு நாளும் 1,700க்கும் அதிகமானோர் கண்காட்சியைப் பார்வையிடலாம்.
மாறுபட்ட கதைசொல்லும் அம்சமும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் கண்காட்சிக்கு வரும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அனுபவத்தைத் தரவிருக்கின்றன.
கண்காட்சிக்கு வருவோர் எதிர்கால சிங்கப்பூரில் வாழ்வது, விளையாடுவது, வேலை செய்வது போன்ற அனுபவங்களைப் பெறுவர்.
தொடக்க நிகழ்ச்சியில் பேசிய திரு வோங், சிங்கப்பூர் உருவாக்கிய உணர்வைக் கண்காட்சியின் மூலம் வருகையாளர்கள் பெறுவர் என்று நம்புவதாகக் கூறினார்.
ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலம் வரையிலான சிங்கப்பூர் வரலாற்றின் முக்கிய கூறுகளைக் கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது என்றார் அவர்.
“இன்றைய சிங்கப்பூரை உருவாக்கிய துணிவையும் உணர்வையும் கண்காட்சி எடுத்துக்கூறுகிறது,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.
‘ஷேப்பிங் ஹார்ட்ஸ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த உடற்குறையுள்ள கலைஞர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கண்காட்சியில் தேர்வுசெய்யப்படும் அம்சங்கள் 2026ஆம் ஆண்டு திறக்கப்படும் புதிய ஆர்ச்சர்ட் நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.
கண்காட்சி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
“சிங்கப்பூரர்களின் ஆர்வம் எங்களுக்கு உற்சாகமளிக்கிறது,” என்ற அவர், கண்காட்சியைப் பார்வையிடுவதற்கான இந்த வார இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன,” என்றார்.
நான்கு அதிகாரத்துவ மொழிகளில் இடம்பெறுகிற எஸ்ஜி60 ஹார்ட் அண்ட் சோல் எக்ஸ்பீரியன்ஸ் கண்காட்சி ஒரு மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும். ஏழு வயதுக்கு மேற்பட்டோர் கண்காட்சிக்கு வரும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஆர்ச்சர்ட் நூலகத்தின் மூன்றாம், நான்காம் தளங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கண்காட்சி காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கண்காட்சி காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இடம்பெறும்.
சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகமும் சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனமும் ‘ஹார்ட் அண்ட் சோல்’ அமைப்புடன் இணைந்து அங்கு ஒரு நிழற்படக்கூடத்தை அமைத்துள்ளன. அங்கு எடுக்கப்படும் ஒவ்வொரு படத்திற்கும் $1 வழங்கி, நான்கு மனநல அறநிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாக அவை உறுதியளித்துள்ளன. அதிகபட்சமாக $500,000 வரை நிதியாதரவு வழங்கப்படும்.
இவ்வாண்டு இறுதிவரை நடைபெறும் கண்காட்சி ஏறக்குறைய 400,000 வருகையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நுழைவுச்சீட்டுகளைப் பெற www.heartandsoul.gov.sg என்னும் இணையப்பக்கத்தை நாடலாம்.