உலகின் பல இடங்களில் சமூக மோதல்களும் பிரிவினைவாதங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் சமயத் தலைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அதேபோல் சிங்கப்பூரில் உள்ள இஸ்லாமியப் போதகர்கள் முற்போக்கான தலைமைத்துவத்தைத் தொடர வேண்டும் என்று பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார்.
இஸ்லாமியப் போதகர்கள், தொண்டூழியர்கள் அமைப்பு (APVN) சிங்கப்பூர் எக்ஸ்போவில் சனிக்கிழமை (அக்டோபர் 4) நடத்திய நிகழ்ச்சியில் திரு வோங் கலந்துகொண்டு பேசினார்.
சிங்கப்பூரில் உள்ள இஸ்லாமியப் போதகர்கள் முற்போக்கான சிந்தனையுடன், உண்மைக்கு நெருக்கமாக, நடைமுறைக்கு ஒட்டிய நடவடிக்கைகளைப் பின்பற்றுவது மனத்திற்கு மகிழ்ச்சி தருகிறது என்றும் பிரதமர் வோங் கூறினார்.
ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து, சமூகத்திற்குச் சிறந்த முறையில் பங்களிப்பது இஸ்லாமியப் போதகர்கள், தொண்டூழியர்கள் அமைப்பின் முக்கிய நோக்கம் என்று கூறப்பட்டது.
சமயம் சார்ந்த நடவடிக்கை மட்டுமன்றி அர்த்தமுள்ள வகையில் மற்ற துறைகளிலும் ஈடுபட அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
“உலகம் முன்னைவிடத் தற்போது சற்று வேறுபட்ட சூழ்நிலையில் உள்ளது. பொய்த் தகவல்கள், இணையத்தில் பயங்கரவாதச் சித்தாத்தங்களைப் பகிர்வது உள்ளிட்டவை இளம் சிங்கப்பூரர்களைப் பாதிக்கக்கூடும்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
இஸ்லாமியச் சமய போதகர்கள் புதிதாக அமைக்கப்பட்ட இந்த அமைப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“புதிய அமைப்பு மூலம் பல்லினக் கலாசாரத்தைக் கொண்ட நமது சிங்கப்பூர் மக்களுக்கு உதவி செய்யப் பல வாய்ப்புகள் கிடைக்கும்,” என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படும். அந்தச் சமூகத்திற்கு தேவையானவை தொடர்ந்து செய்துதரப்படும் என்றார் பிரதமர் வோங்
“ரோச்சோர் வட்டாரத்தில் 2028ஆம் ஆண்டு இஸ்லாமியக் கல்விக்காகப் புதிய கல்லூரியின் வளாகம் திறக்கப்படுகிறது. அதில் மேலும் சிறந்த, அடுத்த தலைமுறை இஸ்லாமியச் சமய போதகர்கள் உருவாகுவர்,” என்று திரு வோங் நம்பிக்கை தெரிவித்தார்.