தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோய்க் கண்காணிப்பை சிங்கப்பூர் தொடர்ந்து வலுப்படுத்திவருகிறது: ஓங் யி காங்

2 mins read
8f59b015-2105-46c8-afb2-54c5b7a3730a
77ஆவது உலக சுகாதார கூட்டத்தில் கலந்துகொண்ட பேராளர்கள். - படம்: ஏஎஃப்பி

கொவிட்-19 கிருமித்தொற்றின் அழிவுகரமான தாக்கத்தை அடுத்து கொள்ளைநோய் ஒத்துழைப்பு தொடர்பான அனைத்துலக ஒப்பந்தம் ஒன்று தொடர்ந்து நிலுவையில் இருந்தாலும் எதிர்காலக் கொள்ளைநோய்களைச் சமாளிக்க சிங்கப்பூர் தொடர்ந்து அதன் நோய்க் கண்காணிப்பு மற்றும் ஆதரவு முயற்சிகளை வலுப்படுத்தும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் மே 27 முதல் ஜூன் 1 வரை நடைபெற்ற உலக சுகாதாரக் கூட்டத்தை அடுத்து திரு ஓங் தமது ஃபேஸ்புக் பதிவில் இவ்வாறு கூறியிருந்தார்.

ஈராண்டு பேச்சுவார்த்தையை அடுத்து உலக சுகாதார நிறுவனம் முன்னெடுத்த கொள்ளைநோய் ஒப்பந்தம் கைகூடவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார் அவர்.

கொள்ளைநோய் காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய தடுப்பூசி தொடர்பில் இருந்த வேறுபாட்டால் வளரும், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிடையே இருந்த நம்பிக்கை குலைந்ததை அமைச்சர் ஓங் காரணமாகச் சுட்டினார்.

அடுத்த கொள்ளைநோயைச் சிறந்த முறையில் கையாள்வது குறித்த அனைத்துலக ஒப்பந்தம் விரைவில் முடிவாகும் என்று பொதுச் சுகாதார அதிகாரிகள் கூறினர்.

இருப்பினும், பங்கேற்ற நாடுகளில் சில, பலதரப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் இணக்கம் காண முடியாததால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இருப்பினும், அனைத்துலக சுகாதார விதிமுறைகள் என்ற கட்டமைப்பு தொடர்பில் வெற்றிகரமாகச் செய்யப்பட்ட திருத்தங்களைத் தாம் வரவேற்பதாக திரு ஓங் குறிப்பிட்டார்.

இபோலா, எச்1என்1, கொவிட்-19 போன்றவை உள்பட அனைத்துலக அளவில் பரவும் நோய்களைத் தடுத்தல், கண்டறிதல், செயல்படுதல் ஆகியவை தொடர்பில் நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தக் கட்டமைப்பு விளங்கும்.

குறிப்புச் சொற்கள்