MyActiveSG+ இணையவாசலை ஆகஸ்ட் 15ஆம் தேதி முழுமையாக அறிமுகப்படுத்தியதில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது என்று பயனாளர்களிடமிருந்து கிடைத்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து, தேசிய விளையாட்டு அமைப்பான ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு, ‘ஆக்டிவ் எஸ்ஜி’ விளையாட்டு வசதிகளில் அடையாள அட்டைகளை ஸ்கேன் செய்வதை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
‘ஆக்டிவ் எஸ்ஜி’ உறுப்பினர் மேலாண்மை முறையிலிருந்து மைஆக்டிவ்எஸ்ஜி+(MyActiveSG+) இணைய அடிப்படையிலான தளத்திற்கு மாறியது சில பயனர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு வசதிகள், குறிப்பாக நீச்சல் குளங்களுக்குள் நுழையும்போது தாங்கள் சிக்கல்களை எதிர்நோக்கியதாக இணையத்தில் புலம்பிய பயனாளர்கள், இது “பின்னோக்கிய படி” என்று குறைகூறினர்.
“ஆகஸ்ட் 15ஆம் தேதி மைஆக்டிவ்எஸ்ஜி+இன் முழு அறிமுகத்துடன், புதிய நுழைவு முறையில் பொதுமக்களுக்கு உதவ எங்கள் விளையாட்டு மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்தோம,” என்று ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பின் பேச்சாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“அதிகாரிகள் பயனாளர்களின் அடையாள அட்டைகளை நேரடியாகச் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் பொதுமக்களில் சிலர் கடந்த இரண்டு நாள்களாக எங்கள் நீச்சல் குளங்களில் அதிக நேரம் வரிசையில் காத்திருந்து சிரமத்தை எதிர்கொண்டதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
“ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அடையாள அட்டைகள் ஸ்கேனிங்கை மீண்டும் செயல்படுத்தியுள்ளோம்,” என்றும் அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மைஆக்டிவ்எஸ்ஜி+இல் நுழைவுச் சீட்டை வாங்கிய பயனர்கள் தங்கள் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பேஷன் அட்டை (Passion Card) அல்லது மாணவர் அட்டை போன்றவற்றைக் காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு ஜூன் 15 முதல் புதிய முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால் சில பயனர்கள் அதில் சில பிரச்சினைகளை எதிர்நோக்கினர்.
தொடர்புடைய செய்திகள்
ActiveSG பணம் நிரப்புதலுடன் வாங்கப்பட்ட அட்டைகள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பயனர்களின் மைஆக்டிவ்எஸ்ஜி+ கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
“உடலுறுதிக் கூடங்களுக்கு தங்கள் வருகைகளை சிறப்பாக திட்டமிட விரும்பும் பயனர்களிடமிருந்தும் கருத்துகள் கிடைத்தன. மேலும் மைஆக்டிவ்எஸ்ஜி+இல் உடலுறுதிக் கூடத்தைப் பயன்படுத்துவோர் குறித்த நேரடித் தகவல்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்றும் அந்தப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இது குறித்த மேல் விவரங்களுக்கு 1800-344-1177 எனும் எண்ணை அழைக்கலாம் அல்லது www.activesgcircle.gov.sg/myactivesg-plus எனும் இணையப் பக்கத்தை நாடலாம்.

