விநியோகத் தொடர் மற்றும் தளவாடத் தொழில்துறை நிபுணர்களுக்கு முத்தரப்புப் பங்காளித்துவ ஏற்பாட்டின்கீழ் திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எஸ்டி லாஜிஸ்டிக்ஸ், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஆகிய முத்தரப்பினருக்கு இடையே அதற்காகப் பங்காளித்துவம் ஏற்டுத்தப்பட்டு உள்ளது.
விநியோகத் தொடர் மற்றும் தளவாடத் தொழில்துறையில் பணிபுரியும் ஏறத்தாழ 15,000 பேர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்டி லாஜிஸ்டிக்ஸ் தனது விநியோகிப்பாளர்களின் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஊழியர்களுக்கு மின்னிலக்கமயம், நீடித்த நிலைத்தன்மை, வேலையிடப் பாதுகாப்பு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கும்.
அதற்கான இணக்கக் குறிப்பு ஒன்று, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) நடைபெற்ற விநியோகத் தொடர் கற்றல் விழா 2025ல் கையெழுத்தானது. எஸ்டி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் விநியோகத் தொடர் ஊழியர் சங்கம் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கிடையே, விநியோகத் தொடர் மற்றும் தளவாடத் தொழிலின் தோற்றத்தை செயற்கை நுண்ணறிவும் மின்னிலக்கமயமும் மாற்றி வருவதாக தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.
அந்த இரு பிரிவுகளின் தோற்றம் மாறுவதற்கேற்ப அவற்றின் வேலைத்தன்மையும் மாறும் எனவும் வேலை செய்வோரின் திறன்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய நிறுவனங்களின் ஊழியர் திறன்வளர்ப்பில் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் குவீன் பீ’யாக ஈராண்டு காலம் செயல்பட்ட எஸ்டி லாஜிஸ்டிக்ஸ் தனது கட்டமைப்பில் உள்ள 80 சிறிய, நடுத்தர நிறுவனங்களின் உருமாற்றத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது இன்னொரு மூன்றாண்டு காலத்திற்கு ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் குவீன் பீ’யாக மறுநியமனம் பெற்று உள்ளது.
விநியோகத் தொடர் மற்றும் தளவாடத் தொழில்துறையினருக்குப் பயிற்சி அளிக்க அது அந்த நியமனத்தைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, தனது கட்டமைப்பில் உள்ள 150க்கும் மேற்பட்ட விநிப்பாளர்களின் ஊழியர்களுக்குத் திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க எஸ்டி லாஜிஸ்டிக்ஸ் திட்டமிட்டு உள்ளது.