பாலஸ்டியர் ரோடு சீன ஆலயத்தில் புலித் தெய்வச் சிலை காணாமல் போனது

1 mins read
ca2e1f54-285a-485a-aa1e-b8924f29e0f8
பாலஸ்டியர் ரோட்டில் உள்ள சீனர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) காணாமல் போனதாக நம்பப்படும் புலித் தெய்வச் சிலையின் தோற்றம். - படம்: ரோச்சோர் துவா பெக் கொங் சீன ஆலயம்

பாலஸ்டியர் ரோட்டில் உள்ள ‘ரோச்சோர் துவா பெக் கொங்’ சீன ஆலயத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வணங்கப்பட்டு வந்த புலித் தெய்வச் சிலைகளில் ஒன்றை சனிக்கிழமையிலிருந்து (டிசம்பர் 6) காணவில்லை.

சம்பவம் பற்றி ஞாயிற்றுக்கிழமை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்தோர் முன்வரும்படி ஆலயம் கேட்டுக்கொண்டுள்ள நிலையில் அங்குள்ள மற்ற சிலைவடிவங்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ஓர் ஆடவர் அந்த சன்னதியருகே வெள்ளிக்கிழமை இரவு 11.48 மணிமுதல் 30 நிமிடங்கள் அங்கு நடமாடியது கண்டறியப்பட்டுள்ளது.

களிமண்ணால் செய்யப்பட்ட அந்தச் சிலை எண் 249 பாலஸ்டியர் ரோட்டில் உள்ள அந்த ஆலயத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் காணப்படவில்லை என்று ஆலயப் பேச்சாளர் கூறினார். அங்கு பொதுமக்கள் வணங்குவதற்கு வைக்கப்பட்ட ஏழு புலிகளின் சிலைகளில் அதுவும் ஒன்று என்று அவர் விளக்கினார். அந்தச் சன்னதி பொதுவாக திறந்தே இருக்கும்.

“எங்களுக்கு இது ஆச்சரியமாக உள்ளது. வெளியில்தான் இத்தனை நாளாக அது வைத்து வணங்கப்பட்டது. முதன்முறையாக இது நடந்துள்ளது. தகவல் அறிந்தோர் உதவ முன்வரவேண்டும்,” என்று அந்தப் பேச்சாளர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

அந்தச் சீன ஆலயம் 1847ஆம் ஆண்டில் பாலஸ்டியர் பகுதியில் இருந்த தோட்டங்களில் பணியாற்றிய ஹொக்கியன் மொழி பேசும் சீனத் தொழிலாளர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது சிங்கப்பூர் ஹொக்கியன் ஹுவே குவான் சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

காவல்துறையை மேல்விவரங்களுக்காக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்