கூட்டுரிமை புளோக்குகளில் பார்சல் பெட்டகங்கள்

1 mins read

சிங்கப்பூர் முழுவதும் உள்ள குடியிருப்புப் பேட்டைகளுக்குச் சிறந்த முறையில் பலனளிக்கும் வகையில் பார்சல் பெட்டகங் களைப் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இதற்கு முன்னதாகவே குறைந்தபட்சம் 30 கூட்டுரிமை வீட்டு புளோக்குகள் தங்கள் கட்டடங்களுக்குள் அத்தகைய பெட்டகங்களை அமைத்திருக்கின்றன. மேலும் 30 தனியார் குடியிருப்புகள் அத்தகைய பார்சல் பெட்டிகளை அமைக்க கையெழுத்திட்டு இருக்கின்றன.

ஒரு முன்னோடி திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டில் பொங்கோல், புக்கிட் பாஞ்சாங்கில் இருக்கும் அரசாங்க குடியிருப்புப் பேட்டைகளில் பார்சல் பெட்டகக் கட்டமைப்பு திட்டம் சோதித்துப் பார்க்கப்படும் என்று கடந்த நவம்பர் மாதம் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் பார்சல்கள் பட்டுவாடாவை மேம்படுத்தும் வகையில் குடியிருப்புப் பேட்டைகளில் மத்திய பார்சல் பெட்டக முறையை ஏற்படுத்த திட்டங்கள் இருப்பதாக துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் சென்ற ஆண்டு அறிவித்திருந்தார்.