வூஹான் கிருமி உள்ள சீன நாட்டவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றியுள்ள நிமோனியா கிருமி தொற்றியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டாவது நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த 26 வயது சீன நாட்டு ஆடவர் வூஹானுக்குச் சென்று வந்துள்ளார். ஆனால், அவர் வூஹான் நிமோனியக் கிருமி தோன்றியிருக்கக்கூடும் என்று கருதப்படும் கடல் உணவு கொள்முதல் சந்தைக்குச் செல்லவில்லை என்றும் கூறப்பட்டது.

“அந்த ஆடவர் கூடுதல் சுகாதார மதிப்பீட்டு சோதனைக்காகவும் பாதுகாப்பு நடைமுறைக்காகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்,” என்றும் அமைச்சு தெரிவித்தது.

உடல் வெப்பநிலை பரிசோதனை அமைக்கப்பட்டுள்ள சாங்கி விமான நிலையத்தில் அவர் அடையாளம் காணப்பட்டாரா என்று தெரியவில்லை.

“வூஹான் நிமோனியா கிருமித் தொற்றுக்கும் அவருக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதை உறுதி செய்யும் பரிசோதனையில் அவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்,” என்றும் அமைச்சு விவரித்தது.