மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வாண்டு இறுதிக்குள் சுமார் 1,200 வேலைகளும் வேலைப் பயிற்சி வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட தேசிய வேலைகள் மன்றத்தின், வேலைகளை உருவாக்கும் மற்றும் திறன்களை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவும் தற்போதுள்ள எஸ்ஜி எனேபல் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இது அமைகிறது.
தற்போது மூன்று திட்டங்களின் வழி மாற்றுத்திறனாளிகளுக்கு 150 புதிய வேலை வாய்ப்புகள், பயிற்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்க அரசாங்கம் பணியாற்றி வருகிறது என்று அமைச்சர் நேற்று பென் பசிஃபிக் ஹோட்டல் குழுமத்தின் கீழ் இயங்கும் பார்க்ராயல் கலெக்ஷன் மரினா பே ஹோட்டலுக்கு வருகை மேற்கொண்டபோது தெரிவித்தார்.
இந்தக் குழுமம் தனது அலுவலகங்கள், சொகுசு அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றில் வீட்டு பராமரிப்பு, அலுவலகப் பணிகள் ஆகிய வேலைகளைச் செய்ய 27 மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. அடுத்து வரும் மாதங்களில் மேலும் அத்தகைய ஒன்பது பேர் சேர்ந்துக்கொள்வார்கள்.
புதிதாக அறிவிக்கப்பட்ட இடைக்காலப் பணியமர்வு பயிற்சி, பணி உள்ளகப் பயிற்சி, திறன் மேம்பாடு ஆகியவை தற்போதுள்ள எஸ்ஜி எனேபல் அமைப்பு நிர்வகிக்கும் 'ஓப்பன் டோர்' எனும் மாற்றுத்திறனாளி வேலைவாய்ப்புத் திட்டத்தின் முயற்சிகளுக்குக் கூடுதல் உதவியாக இருக்கும்.
இத்திட்டத்தில் சேர்ந்துகொள்ள முதலாளிகளுக்கும் பயிற்சி வழங்குநர்களுக்கும் எஸ்ஜி எனேபல் அமைப்பு ஊக்கமளிக்கும்.
இடைக்காலப் பணியமர்வு பயிற்சித் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுநேர அல்லது பகுதிநேர வேலைகளை வழங்கும் முதலாளிகளுக்கு அந்த ஊழியர்களுக்கு அரசாங்கம் 90% சம்பள ஆதரவு அளிக்கும்.
"மாற்றுத்திறனாளிகள் அல்லது இதர சிரமங்களை எதிர்நோக்குபவர்கள் என எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் இந்த கொவிட்-19 சூழலில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் சூழலில் அவர்களுக்கு பொதுவில் சம்பள ஆதரவும் பயிற்சியும் கொடுக்கும் பட்சத்தில் அதையே மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும்," என்றும் திரு மசகோஸ் கேட்டுக் கொண்டார்.
இவர்களும் இயல்பானவர்களுடன் இணைந்து பணியாற்ற அவர்களுக்குத் தேவைப்படும் வேலையிடச் சூழலை முதலாளிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

