வடக்கு-கிழக்கு ரயில் பாதை: ரயிலுக்கு மின்சாரம் வழங்கும் அமைப்பில் கோளாறு
மின்விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் நேற்றுக் காலையில் மூன்று மணி நேரம் சேவை பாதிக்கப்பட்டது.
காலை 9.53 மணிக்கு எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் ரயில் சேவை மீண்டும் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தது.
பின்னர் காலை 10.18 மணிக்கு வெளியான அடுத்த டுவிட்டர் பதிவில், குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் இணைப்பு, இலவசப் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.
"புவாங்கோக் நிலையத்தில் மின்விநியோகச் சங்கிலிய அமைப்பு சேதமடைந்துள்ளது. எங்கள் பொறியாளர்கள் அதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு மூன்று மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது.
காலை 7 மணியளவில் அந்தக் கோளாறு ஏற்பட்டதாக அது குறிப்பிட்டது. சேவை பாதிப்பால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக பயணிகள் அனைவரிடமும் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
ரயில் சேவை பாதிப்பு குறித்து காலை 7.18 மணிக்கு டுவிட்டர் வழியாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் அறிவித்தது. ஹார்பர் ஃபிரன்ட் - சிராங்கூன் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை தொடர்வதாகவும் சிராங்கூன் - பொங்கோல் நிலையங்களுக்கு இடையே இலவசப் பேருந்து சேவைகள் வழங்கப்படுவதாகவும் அது கூறியது.

