தசைநார் தேய்வால் பாதிக்கப்பட்டுள்ள 32 வயது திரு லிம் கே சூங், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்க தமது நிறுவனம் தயாராக உள்ளது என்று கருதுகிறார். திரு சான் அந்த நிறுவனத்தில் பகுப்பாய்வாளராகப் பணியாற்றுகிறார்.
சிங்கப்பூர் தசைநார் தேய்வுச் சங்கத்தின் உதவியுடன் தம்மால் நான்கு வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்ற முடிகிறது என்று கூறிய திரு லிம் தமது அனுபவத்தை நேற்று அச்சங்கத்துக்கு வருகையளித்த அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் பகிர்ந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஹலிமா, "மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்த முதலாளிகளுக்கு ஊக்கமளிக்க இன்னும் அதிக ஆதரவுத் திட்டங்கள் அமைக்கப்படலாம்," என்றார்.
"அதில் ஒன்று, அரசாங்கம் வழங்கும் உடற்குறையுள்ளோருக்கான வேலை நியமன உதவித் தொகை மூலம் கிடைக்கும் சம்பளக் கழிவு.
"மற்றொன்று, சில உடற்குறையுள்ளவர்களுக்கு அதிகமான மானியங்கள் வழங்குவது மூலம் அதிக செலவாகும் தகவமைப்பு தொழில்நுட்பத்தை அவர்கள் கற்றுக்கொள்ள வழிவகுப்பது.
"அதன் பின்னர் முதலாளிகளும் அவர்களுக்கு வேலை கொடுக்கத் தயங்கமாட்டார்கள். மாற்றுத்திறனாளிகளும் தாங்கள் கற்ற தகவமைப்பு தொழில்நுட்பத்தை வேலையில் பயன்படுத்த முடியும்," என்றும் திருவாட்டி ஹலிமா விவரித்தார்.
சிங்கப்பூர் தசைநார் தேய்வுச் சங்கத்தில் அதிபர் ஹலிமா நேரடியாகவும் இணையம் மூலமாகவும் மாற்றுத்திறனாளிகள் சிலருடன் கலந்துரையாடினார். பின்னர் அங்கு நடைபெற்ற உயிரோவியம், வரைகலை வகுப்புகளைப் பார்வையிட்டார்.

