தம்மைப் பார்த்து முறையற்ற செய்கையைக் காட்டியதாகக் கருதி ஆடவர் ஒருவரைக் காயப்படுத்திய போர்ச்சுகீசிய ஆடவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாத குற்றத்துக்காகவும் அவருக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை 43 வயது மார்க்கோ பாவ்லோ கொன்சால்வெஸ் கியூமாரேஸ் ஒப்புக்கொண்டார். காயமடைந்த ஆடவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.
கியூமாரேஸ் ஃபீஃபா உரிமம் பெற்ற காற்பந்து முகவராவார். ஐரோப்பிய காற்பந்துக் குழுக்
களுக்காக விளையாட திறமைமிக்க ஆட்டக்காரர்களைத் தேடிக் கண்டுபிடிக்க அவர் சிங்கப்பூர் வந்துள்ளார்.
2004ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வந்த கியூமாரேஸ் 2010ஆம் ஆண்டில் அனைத்துலகக் காற்பந்து நிர்வாக நிறுவனத்தை நிறுவினார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி பிற்பகல் 1 மணி அளவில் பொங்கோல் வட்டாரத்தில் உள்ள ஒயேசிஸ் தொடக்கப்பள்ளியில் பயிலும், தமது ஏழு வயது மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு வீடு செல்ல கியூமாரேஸ் அங்கு சென்றிருந்தார்.
பள்ளிக்கு வெளியே தமது மகளுக்காக காரில் காத்திருக்க அவர் திட்டமிட்டார். அப்போது இன்னொரு கார் ஓட்டுநர் கார் எச்சரிக்கை ஒலியை எழுப்ப, கியூமாரேஸ் அவருக்கு வழிவிட்டார். அந்த கார் ஓட்டுநர் கியூமாரேஸைக் கடந்து சென்றபோது அவர் தம்மைப் பார்த்து முறையற்ற செய்கை ஒன்றைக் காட்டியதாக கியூமாரேசுக்குத் தோன்றியது.
இதையடுத்து, அந்த காரை அருகில் இருந்த வாகன நிறுத்துமிடத்துக்கு கியூமாரேஸ் பின்தொடர்ந்தார். முகக்கவசம் அணியாமல் அந்த கார் ஓட்டுநருடன் கியூமாரேஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிப்போக, அந்த ஆடவரை கியூமாரேஸ் உதைத்தார். அதுமட்டுமல்லாது, கார் கதவை அந்த ஆடவரின் கால் மீது மோதினார். அந்த ஆடவரின் இடது காதையும் கியூமாரேஸ் காயப்படுத்தினார். தமது செயலுக்கு கியூமாரேஸ் வெட்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமக்குக் கருணை காட்டும்படி அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்துக்தாக அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
தகுந்த காரணமின்றி முகக்கவசம் அணியாத குற்றத்துக்காக அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

