அண்டைநாடான மலேசியாவில் தமிழ்க் கல்வித் துறை எதிர்நோக்கும் சவால்கள் பற்றி இங்குள்ள நிபுணர்களும் பயிற்சி ஆசிரியர்களும் அண்மையில் இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
தேசியக் கல்விக்கழக ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையின் தமிழ்மொழி, பண்பாட்டுத்துறை ஜூன் 11ஆம் தேதி காலை நடத்திய மெய்நிகர் நிகழ்வில் அது பற்றி பேசப்பட்டது.
'மலேசியத் தமிழ்க்கல்வி: சவால்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பிலான 'தமிழ்க் கருத்தரங்கச் சிறப்புரை' நிகழ்வில் சிங்கப்பூரையும் வெளிநாடுகளையும் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், தமிழாசிரியர்கள், தமிழார்வலர்கள் உட்பட சுமார் 150 பேர் கலந்துகொண்டனர்.
தேசிய கல்விக் கழகத் தமிழ் கலைக் கல்வியியல் வகுப்பின் வருகைதரு கல்வியாளராகப் பங்கேற்று வந்த மலேசியாவின் சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் சார்பு நிலைப் பேராசிரியர் என் எஸ். இராஜேந்திரன், 'மலேசியாவில் தமிழ்க் கல்வி: சவால்களும் தீர்வுகளும்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மலேசியத் தமிழ்க் கல்வியின் பின்னணி, வரலாறு, அதன் தற்கால நிலை, தமிழ்க் கல்வி எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வு அளிக்கும் பரிந்துரைகள் ஆகியவற்றைப் பற்றி பேசினார்.
மலேசியாவில் மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ்க் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையுடன், மொழியியல் துறையிலும் தமிழ் ஆய்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
எனினும் மலேசியாவில் தமிழ்க்கல்வி இன்றைய நிலையில் சரிவைச் சந்தித்து வருவதையும் பேராசிரியர் என் எஸ். இராஜேந்திரன் குறிப்பிட்டார்.
தற்போது அந்நாட்டில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் அரசாங்கத்தின் உதவியுடன் நடப்பதாக அவர் தெரிவித்தார்.
பெண்கள் அதிகமானோர் தமிழாசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். மலேசியாவில் இளம் ஆசிரியர்கள் மிகுதி என்றார் அவர்.
தமிழ்க்கல்வியின் மேம்பாட்டுக்கான பரிந்துரைகளை முன்வைத்த அவர், தமிழ்க்கல்வியும் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் நீதிமன்ற வழக்கு, குறைவான குழந்தைப் பிறப்பு விகிதம், ஊடகங்களில் ஆங்கிலக்கலப்பு உட்பட பல்வேறு சவால்களைப் பட்டியலிட்டார்.
மலேசியாவின் பிரதமர் அலுவலகத் துறையில், 2012ல் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுப் பிரிவு உருவாக்கப்பட்டது.
முதல் முதலாகப் பிரதமர் துறையில் இடம் பெற்ற இந்தப் பிரிவுவழி, தமிழ்க் கல்வி, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஒரு விரிவான ஆய்வு முயற்சி இடம்பெற்றதை பேராசிரியர் இராஜேந்திரன் விளக்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தேசியக் கல்விக் கழகத்தின் ஆசிய மொழிகள், பண்பாடுகள் துறையின் துணைத்தலைவர், இணைப் பேராசிரியரும் சீன எழுத்தாளருமான திரு டான் சீ லே கலந்துகொண்டார்.
தமிழ்மொழி, பண்பாட்டுத் துறையில் அயல்நாட்டுப் பேராசிரியர்கள் வருகைதந்து கற்பிப்பதால் கிடைக்கும் பயன்கள், மாணவர்கள் பெறும் புதிய அறிவு, ஊக்கம் ஆகியன குறித்து அவர் குறிப்பிட்டார். மேலும், தாய்மொழிகளின் அவசியத்தையும் அவை குறித்த பின்னணிச் செய்திகளையும் வீட்டு மொழியாகவும் சமூக மொழியாகவும் தமிழ்மொழி தொடர்ந்து மேம்படுவது குறித்த கருத்துகளையும் சீன மொழிக்கல்வியுடன் இணைத்துப் பேராசிரியர் டான் பேசினார்.
செய்தி: முதுகலைக் கல்வியியல் மாணவர்கள், தமிழ்மொழி, பண்பாட்டுத்துறை, தேசியக் கல்விக்கழகம்

