கொவிட்-19 தொடர்பான விதிமுறைகளை புக்கிட் மேரா பகுதியில் வசிக்கும் முதியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தொண்டூழியர்களும் அவ்வட்டார குடியிருப்பாளர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
கொள்ளைநோய்ச் சூழலில் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் சிலர் அவற்றைப் பின்பற்றவில்லை. ஜாலான் புக்கிட் மேராவிலுள்ள புளோக் 3ன் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள இருக்கைகளில் முதியவர் கூட்டம் ஒன்று, உட்கார்ந்தபடி புகைப்பிடித்துக்கொண்டும் கூச்சலிட்டுக்கொண்டும் இருக்கக் காணப்பட்டது. அவர்கள் உணவருந்திய பிறகு, அங்கு குப்பைகள் காணப்படும் என்று குவீன்ஸ்டவுன் ஹொக் சான் பகுதி வசிப்போர் குழுப் பொருளாளர் திரு ஜெயபிரபா குறிப்பிட்டார்.
கொவிட்-19 விதிகளை இந்த மூத்த குடியிருப்பாளர்கள் பின்பற்றாததால், நான்கு இருக்கைகளில் இரண்டு இருக்கைகள் அகற்றப்பட்டன. ஓரறை வாடகை வீடுகள் கொண்ட புளோக் 3ல் 400க்கும் மேற்பட்ட முதியவர்கள் வசிக்கின்றனர். இருக்கைகள் அருகிலிருந்த குப்பைகளால் புறாக்களும் மற்ற பறவைகளும் வரத் தொடங்கியதாக 73 வயது திரு ஜெயபிரபா கூறினார். இருக்கைகளில் உட்காரும் மூத்தோரிடையே ஒரு மீட்டர் இடைவெளி இல்லாதது, முகக்கவசமின்றி உரையாடுவது போன்ற விதிமீறல் நடந்தது.
கொவிட்-19 விதிகளை முதியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக திரு ஜெயபிரபா போன்றோர் உதவிக்கரம் நீட்டினர்.
தினசரி கொவிட்-19 விவரங்களை திரு ஜெயபிரபா இருக்கைகள் அருகே ஒட்டி வைத்துள்ளார்.
வீவக, மருத்துவமனை கடிதங்களை மொழிபெயர்ப்பது, தடுப்பூசிக்காக பதிவுசெய்வது போன்ற நடவடிக்கைகளிலும் தொண்டூழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

