கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பெண்களுக்குத் தெரியாமல் பாவாடைக்குள் படமெடுத்த நிதிப் பகுப்பாய்வாளர்க்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், சென்ற ஆண்டில் அவர் பிடிபட்டார். அவரிடம் பாலியல் இச்சையைத் தூண்டும் கிட்டத்தட்ட 500 காணொளிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகப்படாதபடி அவர் எடுத்த காணொளிகளில் குறைந்தது 285 பேரின் முகங்கள் தெளிவாகத் தெரிந்ததாகக் கூறப்பட்டது. முதல்முறை எடுத்த படத்தில் முகம் தெளிவாகத் தெரியவில்லை எனில் மீண்டும் சென்று முகம் தெளிவாகத் தெரியும்படி படமெடுக்க முயல்வாராம்.
வோங் குவோங் யான், 37, என்ற அந்த ஆடவர் வார நாள்களில் வேலை முடிந்த பிறகும் வார இறுதிகளிலும் கடைத்தொகுதிகள் போன்ற இடங்களுக்குச் சென்று, இந்தக் குற்றச் செயலைச் செய்துவந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி விவோசிட்டியில் உள்ள ஆடைக் கடையில் தமது வேலையை அரங்கேற்றியபோது 31 வயதுப் பெண் ஒருவரிடம் அவர் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.
ஆனாலும், அவரிடம் வாக்குவாதம் செய்தபின் வோங் அப்படியோ அவ்விடத்தைவிட்டு தப்பிவிட்டார். இதுபற்றி அப்பெண் தமது கடை மேலாளரிடம் சொல்ல, அவர் காவல்துறையை அழைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான படத்தைக்கொண்டு காவல்துறையினர் வோங்கை அடையாளம் கண்டது. அதன்பின், காவல்துறை அதிகாரிகள் 2020 பிப்ரவரி 5ஆம் தேதியன்று வோங்கின் வீட்டிற்குச் சென்று, அவரைக் கைதுசெய்தனர்.
பாலியல் ஆசையைத் தூண்டும் காணொளிகள் அடங்கிய கையடக்க வன்தகடு உள்ளிட்ட பொருள்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
வோங் 450க்கும் மேற்பட்ட முறை பாவடைக்குள் படமெடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்படி அவர் படமெடுத்தவர்களில் இருவர் 18 வயதிற்கும் குறைவான பெண்கள் எனக் கூறப்பட்டது.